| ADDED : டிச 27, 2025 05:55 AM
மறைமலை நகர்: திருக்கச்சூர் அரசு பள்ளியில் உள்ள பாழடைந்த கட்டடத்தை இடித்து அகற்ற வேண்டுமென, மாணவர்களின் பெற்றோர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். மறைமலை நகர் நகராட்சி 19வது வார்டு, திருக்கச்சூர் பகுதியில் அரசு துவக்கப் பள்ளி உள்ளது. இதில் திருக்கச்சூர், பெரியார் நகர், அண்ணா நகர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து, 250க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்த பள்ளி வளாகத்தில், 30 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட கட்டடம் உள்ளது. தற்போது, இந்த கட்டடம் பழுதடைந்து, கான்கிரீட் பூச்சுகள் பெயர்ந்து மோசமான நிலையில் உள்ளது. பள்ளிக்கு காலையில் சீக்கிரம் வரும் மாணவர்கள், இந்த கட்டடத்தின் அருகில் விளையாடுகின்றனர். கட்டடம் இடிந்தால், பெரும் அசம்பாவிதம் ஏற்படும். எனவே, மாவட்ட நிர்வாகம் இந்த கட்டடத்தை இடித்து அகற்ற வேண்டும் என, மாணவர்களின் பெற்றோர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.