சிங்கபெருமாள்கோவில் ரயில் நிலையத்தில் குவிந்துள்ள குப்பையை அகற்ற கோரிக்கை
மறைமலை நகர்:சிங்கபெருமாள் கோவில் ரயில் நிலைய நடைமேடையில் குவிந்துள்ள குப்பையை அகற்ற வேண்டுமென, பயணியர் கோரிக்கை விடுத்துள்ளனர். செங்கல்பட்டு -- சென்னை கடற்கரை மார்க்கத்தில், சிங்கபெருமாள் கோவில் ரயில் நிலையம் உள்ளது. இந்த ரயில் நிலைய சுற்றுப்பகுதியில் திருக்கச்சூர், கொண்டமங்கலம், கொளத்துார் உள்ளிட்ட, 20க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இப்பகுதி மக்கள் பல்வேறு பணிகளுக்காக சென்னை, கிண்டி, தாம்பரம் உள்ளிட்ட பகுதிகளுக்குச் செல்ல, இந்த ரயில் நிலையத்தை பயன்படுத்தி வருகின்றனர். இந்த ரயில் நிலையத்தில் உள்ள ஒன்றாவது நடைமேடையில் உள்ள படிக்கட்டின் கீழே, ரயில் நிலைய வளாகத்தில் சேகரிக்கப்பட்ட குப்பை குவித்து வைக்கப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுவதால், பயணியர் அவதிப்பட்டு வருகின்றனர். நோய் பரவும் அபாயமும் உள்ளதால், இங்கு குவிந்துள்ள குப்பையை அகற்ற, ரயில்வே துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பயணியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.