மனை பிரிவுக்கு அபாய மின்தடம் குடியிருப்புவாசிகள் குற்றச்சாட்டு
திருப்போரூர்:தையூர் ஊராட்சியில் தனியார் மனை பிரிவுக்காக, ஏற்கனவே உள்ள மின்தடம் அருகிலேயே, வீடுகளை உரசிச் செல்லும் வகையில் புதிய மின்தடம் அமைப்பதாக, அப்பகுதியில் வசிப்போர் குற்றம்சாட்டி உள்ளனர். திருப்போரூர் ஒன்றியம், தையூர் ஊராட்சியில், ஓ.எம்.ஆர்., சாலையை ஒட்டியுள்ள ஜெயலட்சுமி நகரில், 10க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்த வீடுகளுக்கு ஏற்கனவே, சாலையோரம் மின்கம்பம் அமைக்கப்பட்டு, மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. இந்நிலையில், இந்த வீடுகளைத் தாண்டி, புதிதாக மனைப் பிரிவு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்த புதிய மனைப் பிரிவுக்காக மின் இணைப்பு வழங்க, ஏற்கனவே உள்ள மின்கம்பங்களுக்கு அருகே புதிதாக மின்கம்பங்கள் நடப்பட்டுள்ளன. இதில் மின்வடங்கள் இணைக்கப்பட்டு புதிய மனைப்பிரிவுக்கு மின் இணைப்பு கொடுத்தால், வீடுகளில் மின்கம்பிகள் உரச வாய்ப்புள்ளது. அத்துடன் இந்த புதிய மின்கம்பங்களில், உயரழுத்த மின்சாரம் செல்லும் வகையில் மின் வடங்கள் அமைக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. மின் வடங்கள் வீடுகளில் உரசும் போது, பெரும் அசம்பாவிதம் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, இந்த மின்தட பணியை நிறுத்த வேண்டும் அல்லது பூமிக்கு அடியில் புதைத்து எடுத்துச்செல்ல வேண்டுமென, அப்பகுதியில் வசிப்போர் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது: வீட்டு மாடிக்குச் செல்வதற்கும், மாடியில் வசிப்பவர்கள் சாலையில் எட்டிப் பார்ப்பதற்கும் இடையூறு ஏற்படும். இப்படி மின் தடம் அமைத்தால்,'பால்கனி'யில் விளையாடும் சிறுவர்கள், மின்கம்பிகள் மீது உரசி உயிர்பலி ஏற்படவும் வாய்ப்புள்ளது. பெரும் அசம்பாவிதம் நடப்பதை தடுக்க, தற்போது அமைக்கும் மின்தடம் பணியை நிறுத்த, உயரதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இது குறித்து, மின்வாரியத்திலும் புகார் தெரிவித்துள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.