மாற்றுத்திறன் மாணவர்களுக்கான பகல் நேர காப்பகத்திற்கு சாலை
அச்சிறுபாக்கம்:நம் நாளிதழ் செய்தி எதிரொலியால், அச்சிறுபாக்கத்தில், மாற்றுத்திறன் மாணவர்களுக்கான பகல் நேர காப்பகத்திற்குச் செல்லும் பாதையை,- சிமென்ட் கல் சாலையாக அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.அச்சிறுபாக்கம் பகுதி சென்னை -- திருச்சி தேசிய நெடுஞ்சாலையின் புறவழிச்சாலையில், வட்டார வளர்ச்சி அலுவலக வளாகம் அமைந்துள்ளது.வளாகத்தின் உள்ளே, மாற்றுத்திறன் மாணவர்களுக்கான பகல் நேர காப்பகம், வட்டார வள மையம், புள்ளியியல் துறை மற்றும் நீர் பாசன பிரிவு அலுவலகம் ஆகியவை உள்ளன.மாற்றுத்திறன் மாணவர்களுக்கான பகல் நேர காப்பகத்தில், 25 குழந்தைகள் கல்வி பயின்று வருகின்றனர்.பெற்றோர் தங்களின் குழந்தைகளை, மண்பாதை வழியாக அழைத்துச் சென்று, காப்பகத்தில் விட்டுவிட்டு வருகின்றனர்.மழை மற்றும் வெயில் காலங்களில், மண்பாதை வழியாக இருசக்கர வாகனத்தில் செல்லும் போது, மண்ணில் சிக்கி கீழே விழுகின்றனர்.இருசக்கர வாகனங்களில் அலுவலகத்திற்குச் செல்வோர் மிகுந்த அவதி அடைகின்றனர்.மண் பாதையை, சிமென்ட் சாலையாக அமைத்து தர ஊராட்சி, ஒன்றிய அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, நம் நாளிதழில் செய்தி வெளியானது.இதையடுத்து, 2024- 25 ஒன்றிய பொது நிதி வாயிலாக, 6.16 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், தற்போது சிமென்ட் கல் சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது.