| ADDED : டிச 27, 2025 05:52 AM
செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்தில், 101 அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகள் பராமரிப்பு மற்றும் மின்சாதனங்கள் பழுது பார்க்க, 6.50 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. செங்கல்பட்டு வருவாய் மாவட்டத்தில் செங்கல்பட்டு, மதுராந்தகம் ஆகிய இரு கல்வி மாவட்டங்களில், அரசு உயர் நிலைப்பள்ளி 65, அரசு மேல்நிலைப்பள்ளி 80 என, மொத்தம் 145 பள்ளிகள் உள்ளன. இதில், 100க்கும் மேற்பட்ட பள்ளிகளில் பராமரிப்பு பணி மேற்கொள்ளவும், மின்சாதனங்களை சீரமைக்கவும் கோரி, முதன்மை கல்வி அலுவலகம் மூலமாக, அரசுக்கு அறிக்கை அனுப்பி வைக்கப்பட்டது. அதன் பின், மாவட்டத்தில், 101 பள்ளிகளில் பராமரிப்பு மற்றும் மின்சாதனங்களை சீரமைக்க, 6 கோடியே 50 லட்சம் ரூபாயை ஒதுக்கீடு செய்து அரசு உத்தரவிட்டது. இதில், 19 பள்ளிகளில், மின்சாதனங் களை சீரமைக்க, 47.50 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது. மற்ற பள்ளிகளில், கட்டடங்கள் பராமரிப்பு பணிகள் செய்ய உள்ளனர். இதை செயல்படுத்தும் பொறுப்பை பொதுப் பணித்துறையிடம், கல்வித்துறை ஒப்படைத்துள்ளது. இப்பணிகளுக்கு 'டெண்டர்' விடப்பட்டு, பணிகள் விரைவில் துவக்கப்படும் என, பொதுப்பணித் துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.