| ADDED : ஜன 30, 2024 11:20 PM
செங்கல்பட்டு:செங்கல்பட்டு வட்டாரபோக்குவரத்து அலுவலகம், பரனுார் பகுதியில், ஜி.எஸ்.டி., சாலை அருகில் செயல்பட்டு வருகிறது.இங்கு, புதிய வாகனங்களை பதிவு செய்ய, டிரான்ஸ்போர்ட் வாகனங்கள் புதுப்பிக்க என, தினமும் நுாற்றுக்கணக்கான வாகனங்கள் வருகின்றன. இது தவிர, ஓட்டுனர் உரிமம் உள்ளிட்டவை பெற பலர் வந்து செல்கின்றனர்.நேற்று முன்தினம் வார முதல் நாள் என்பதால், நுாற்றுக்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள், டிராக்டர், ஆட்டோ, தனியார் தொழிற்சாலை பேருந்துகள், சரக்கு வாகனங்கள் உள்ளிட்டவை, வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் குவிந்தன. அந்த வாகனங்கள், ஜி.எஸ்.டி., சாலையில் அணிவகுத்து நின்றன.இது குறித்து வாகன ஓட்டிகள் கூறியதாவது:வழக்கமாக, இருசக்கர வாகனங்கள் பதிவு செய்யும் பணிகள், 11:00 மணிக்கு முடிந்து விடும். ஆனால், இப்போது 3:00 மணி வரை காத்திருக்கும் நிலை ஏற்படுகிறது.அலுவலகத்தின் உள்ளே இருக்கைகள் உள்ளன. அதிகாரிகள் வாகனங்களை சோதனை செய்யும் பகுதியில் இருக்கைகள் இல்லாததால், பல மணி நேரம் நின்ற நிலையில் காத்திருக்க வேண்டி உள்ளது.எனவே, நிரந்தர வட்டார போக்குவரத்து அலுவலர் இல்லாததால், இடைத்தரகர்கள் மூலமாகவே இங்குள்ள அதிகாரிகளை அணுக வேண்டி உள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.