செங்கல்பட்டு:செங்கல்பட்டு கொளவாய் ஏரி சீரமைப்பு பணிகள் முடங்கியுள்ளன. ஏரியில் இருந்து தண்ணீரை வெளியேற்ற, மூடு கால்வாய் அமைப்பதில் ரயில்வே துறை தாமதப்படுத்தி வருவதால், ஏரி சீரமைப்பு பணிகளை பொதுப்பணித் துறையினர் கிடப்பில் போட்டுள்ளனர்.செங்கல்பட்டு கொளவாய் ஏரி, பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த ஏரி, 2,210 ஏக்கர் பரப்பு உடையது. 15 அடி ஆழம் கொண்ட ஏரியில், ஐந்து மதகுகள் உள்ளன.குண்டூர் ஏரி மற்றும் சுற்றுப்புற ஏரிகளில் இருந்து வெளியேறும் உபரி நீர், இங்கு வந்தடையும் வகையில், நீர்வரத்து கால்வாய்கள் உள்ளன. ஏரியில் இருந்து வெளியேறும் உபரி நீர், நீஞ்சல் மடுவு காவல்வாய் வழியாக, பொன்விளைந்தகளத்துார் ஏரியை சென்றடையும்.செங்கல்பட்டு நகராட்சி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர், கொளவாய் ஏரியில் விடப்படுவதால், ஏரி நீரை குடிநீருக்கு பயன்படுத்த முடியாத சூழல் உள்ளது.கடந்த 40 ஆண்டுகளுக்கு முன் துார்வாரப்பட்ட ஏரியில், 1998ல் சுற்றுலா வளர்ச்சி கழகம், இங்கு படகு குழாம் அமைத்தது. அதன்பின், இரண்டு ஆண்டுகளில் ஏரி நீர் மேலும் மாசடைந்ததால், படகு குழாம் மூடப்பட்டது. ஏரியின் ஓரத்திலும், கால்வாய்களிலும் ஆக்கிரமிப்புகள் அதிகரித்துள்ளன. இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றி, ஏரியை துார்வாரி சீரமைத்து, சுற்றுலா தலமாக மாற்ற வேண்டும் என, சமூக ஆர்வலர்கள், அரசிடம் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.இதைத் தொடர்ந்து, படகு குழாம் மற்றும் பூங்காக்கள் அடங்கிய பொழுதுபோக்கு அம்சங்களுடன் ஏரியை புனரமைக்க, 2020ம் ஆண்டு டிச., 16ம் தேதி, 60 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது.இத்திட்டத்தில், ஏரியை ஆழப்படுத்தி புறக்கரை அமைத்து, ஏரியின் கரையை பலப்படுத்துதல், அணுகுசாலை மற்றும் நடை மேம்பாலம் அமைத்தல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.ஏரியில் துார் வாரிய மண்ணை கொண்டு மூன்று திட்டுக்கள், தீவுகள் அமைத்து பூங்கா, சுற்றுச்சூழல் மேம்பாட்டு பணிகள் செயல்படுத்தப்பட உள்ளன. இப்பணிகளுக்கு, 2021ம் ஆண்டு செப்., மாதம் டெண்டர் விடப்பட்டு, பணிகள் துவங்கின. இதற்கிடையில், ஏரியின் கலங்கல் பகுதியில், தண்ணீரை வெளியேற்றும் பகுதியில் ரயில்வே மேம்பாலம் உள்ளது.இதனால், தண்ணீரை வெளியேற்ற முடியாத சூழல் ஏற்பட்டது. அதன்பின், மூடு கால்வாய் அமைத்து, ஏரியில் இருந்து தண்ணீரை வெளியேற்ற, கடந்த ஆண்டு ரயில்வே நிர்வாகத்திற்கு, 2 கோடி ரூபாய் நிதியை, பொதுப்பணித் துறையினர் வழங்கினர்.ஆனால், மூடு கால்வாய் பணியை ரயில்வே நிர்வாகம் துவக்காததால், ஏரி நீரை வெளியேற்ற முடியாமல், ஏரி மேம்பாட்டு பணிகளும், சீரமைப்பு பணிகளும் கிடப்பில் போடப்பட்டுள்ளன.இப்பணியை விரைந்து துவக்க, கலெக்டர் அருண்ராஜ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.கொளவாய் ஏரியில் சீரமைப்பு பணி மேற்கொள்ள, ஏரியில் இருந்து முழுமையாக தண்ணீரை வெளியேற்ற வேண்டும். அதற்காக மூடு கால்வாய் அமைக்க, ரயில்வே நிர்வாகத்திற்கு நிதி வழங்கப்பட்டு விட்டது. ரயில்வே துறை தண்ணீரை வெளியேற்றிய பின், ஏரி மேம்பாட்டு பணிகள் முழுவீச்சில் நடைபெறும்.-- பொதுப்பணித்துறை அதிகாரிகள்,செங்கல்பட்டு.கொளவாய் ஏரி சீரமைப்பு பணிகள் முடிந்து, சுற்றுலாத்தலமாக மாற்றப்படும் என, அரசு அறிவித்தது. ஏரி சீரமைக்கும் பணி, மூன்று ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ளது. நகரவாசிகளின் பொழுதுபோக்கு இடமாக அமைய உள்ள ஏரி மேம்பாட்டு பணியை தீவிரப்படுத்த, மாவட்ட நிர்வாகம், ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.டி.எல்.சுரேஷ்,சமூக ஆர்வலர், மேலமையூர்.