உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு /  சோத்துப்பாக்கம் புறவழி சாலையில் கழிவுநீர் கால்வாய் சீரமைப்பு துவக்கம்

 சோத்துப்பாக்கம் புறவழி சாலையில் கழிவுநீர் கால்வாய் சீரமைப்பு துவக்கம்

மேல்மருவத்துார்: மேல்மருவத்துார் அடுத்த சோத்துப்பாக்கம் புறவழிச் சாலையில், கழிவுநீர் கால்வாயில் ஏற்பட்ட அடைப்பு காரணமாக, கால்வாய் மீது அமைக்கப்பட்ட 'கான்கிரீட் சிலாப்' பெயர்த்தெடுக்கப்பட்டு, அடைப்பை சரிசெய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன. கீழ்மருவத்துார், சோத்துப்பாக்கம் எல்லைப் பகுதியில், சென்னை --- திண்டுக்கல் செல்லும் தேசிய நெடுஞ்சாலை உள்ளது. இங்கு, புறவழிச் சாலையோரம், தேசிய நெடுஞ்சாலைத் துறையினரால் கழிவுநீர் கால்வாய் அமைக்கப்பட்டது. புறவழிச் சாலை ஓரமுள்ள கடைகளில் இருந்து கொண்டு வந்து கொட்டப்பட்ட குப்பையால், இந்த கழிவுநீர் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், கடந்த சில நாட்களாக கழிவுநீர் கால்வாயில் செல்லாமல், சாலையில் வழிந்து தேங்கி நின்றது. இதன் காரணமாக, புறவழிச் சாலையை பயன்படுத்தும் மக்கள், கழிவுநீர் துர்நாற்றத்தால் சிரமப்பட்டு வந்தனர். நேற்று திடீரென, தேசிய நெடுஞ்சாலைத் துறையினர், புறவழிச் சாலையில் போக்குவரத்தை முற்றிலும் நிறுத்தி, கழிவுநீர் கால்வாயின் மீதுள்ள கான்கிரீட் சிலாப்பை 100 மீட்டர் துாரத்திற்கு இடித்து, கால்வாயில் உள்ள குப்பையை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். இதனால், அப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசியது. மேலும், புறவழிச் சாலை முற்றிலும் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. எனவே, கழிவுநீரால் நோய் தொற்று பரவாமல் இருக்கும் வகையில், 'பிளீச்சிங் பவுடர்' துாவி, அடைப்பை நீக்கும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டுமென, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ