உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / குப்பை கொட்டுவோர் மீது நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

குப்பை கொட்டுவோர் மீது நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

மறைமலை நகர், சிங்கபெருமாள்கோவில் ஊராட்சியில், பொது இடத்தில் குப்பை கொட்டுவோர் மீது, ஊராட்சி நிர்வாகம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். காட்டாங்கொளத்துார் ஒன்றியம், சிங்கபெருமாள் கோவில் ஊராட்சியில் சிங்கபெருமாள் கோவில், திருத்தேரி, விஞ்சியம்பாக்கம், சத்யா நகர், பாரேரி, பகத்சிங் நகர் உள்ளிட்ட பகுதிகள் உள்ளன. இங்கு 20,000க்கும் மேற்பட்ட வீடுகள், 200க்கும் மேற்பட்ட வணிக நிறுவனங்கள் உள்ளன. சுற்றியுள்ள 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கானோர், பல்வேறு தேவைகளுக்காக, சிங்கபெருமாள் கோவிலுக்கு வந்து செல்கின்றனர். இந்த ஊராட்சியில் பல இடங்களில் குப்பை அகற்றப்படாமல் உள்ளது. இதனால் கொசுத்தொல்லை அதிகரித்து, நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது: சிங்கபெருமாள் கோவில் ஜி.எஸ்.டி., சாலையோரம் சத்யா நகரில், ரயில் நிலையம் அருகே உள்ள காலி மனையில், அதிக அளவில் குப்பை சேர்ந்துள்ளது. இதனால், அந்த பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுகிறது. பாரேரி நியாய விலைக் கடை, பராசக்தி நகர் செல்லும் சாலையில் கொட்டப்பட்டுள்ள குப்பையால், நியாய விலைக்கடைக்கு உணவுப் பொருட்கள் வாங்க வருவோர், துர்நாற்றம் காரணமாக அவதிப்படுகின்றனர். 'குப்பை கொட்டினால் அபராதம் விதிக்கப்படும்' என, ஊராட்சி நிர்வாகம் சார்பில் அறிவிப்புப் பலகை வைக்கப்பட்டு உள்ளது. ஆனால், யாரும் அதை கண்டுகொள்வதில்லை. எனவே, பொது இடத்தில் திறந்தவெளியில் குப்பை கொட்டுவோர் மீது, ஊராட்சி நிர்வாகம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் ஒவ்வொரு வீடாகச் சென்று, முறையாக குப்பையை வெளியேற்ற விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி