உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / கீரப்பாக்கத்தில் ரூ.11 கோடியில் சேமிப்பு கிடங்கு 5,000 டன் உணவு பொருட்களை சேமிக்க வசதி

கீரப்பாக்கத்தில் ரூ.11 கோடியில் சேமிப்பு கிடங்கு 5,000 டன் உணவு பொருட்களை சேமிக்க வசதி

செங்கல்பட்டு:கீரப்பாக்கம் கிராமத்தில், வட்ட ஒழுங்குமுறை கிடங்கு கட்ட, 11.10 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து அரசு உத்தரவிட்டது. அரசு நிலம் ஒதுக்கிய பிம், கிடங்கு கட்டும் பணி துவக்கப்பட உள்ளது.செங்கல்பட்டு மாவட்டத்தில், செங்கல்பட்டு, மதுராந்தகம், செய்யூர், திருக்கழுக்குன்றம், திருப்போரூர், வண்டலுார், தாம்பரம், பல்லாவரம் ஆகிய தாலுகாக்கள் உள்ளன.ஆறு தாலுகாக்களிலும், 841 ரேஷன் கடைகள் உள்ளன. இந்த கடைகளுக்கு, செங்கல்பட்டு அடுத்த திம்மாவரம் கிராமத்தில் உள்ள தமிழக நுகர்பொருள் வாணிப கழக அரிசி ஆலையில் இருந்து, ரேஷன் கடைகளுக்கு அரிசி வினியோகம் செய்யப்படுகிறது.இதுமட்டும் இன்றி, மாவட்ட நுகர்பொருள் வணிப கழக கிடங்கு, வல்லம், திருக்கழுக்குன்றம், மதுராந்தகம் ஆகிய பகுதிகளில் உள்ளன. இங்கு, கோதுமை, சர்க்கரை, மளிகை பொருட்கள் சேமித்து வைக்கப்படுகின்றன.அதன்பின், மாதந்தோறும் ரேஷன் கடைகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. சென்னை திருவான்மியூர் பகுதியில், நுகர்பொருள் வாணிப கழக கிடங்கு, தனியார் கட்டடத்தில் பல ஆண்டுகளாக இயங்கி வருகிறது.இந்த கிடங்கில், ரேஷன் கடைகளுக்கு அனுப்பப்படும் பொருட்கள் பாதுகாப்பாக வைக்கப்படுகின்றன. இங்கிருந்து, வண்டலுார், தாம்பரம் ஆகிய தாலுகாக்களில் உள்ள ரேஷன் கடைகளுக்கு பொருட்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன.கடந்த ஆண்டு கன மழையில், தனியார் கட்டடத்தில் மழைநீர் ஒழுகி பொருட்கள் சேதமடைந்தன. இதனால், நுகர் பொருள் வாணிப கழக கிடங்கு கட்டித்தர வேண்டும் என, கூட்டுறவுத் துறையினர் அரசுக்கு கருத்துரு அனுப்பி வைத்தனர்.இதற்கிடையில், தாம்பரம் மாநகராட்சியில் உணவு பாதுகாப்புத் துறை அமைச்சர், செங்கல்பட்டு மாவட்ட ஆய்வு கூட்டத்தை, கடந்த ஜூன் மாதம் நடத்தினார்.அப்போது, வண்டலுார், தாம்பரம் தாலுகாக்களில், உணவு பொருட்கள் சேமித்து வைக்க கிடங்கு வசதியில்லை என, அதிகாரிகள் தெரிவித்தனர். அப்போது, கிடங்கு அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என, அமைச்சர் உறுதியளித்தார். அதன்பின், கடந்த சட்டசபை கூட்டத்தொடரில், 2024 - 25ம் நியாண்டில், வண்டலுார், தாம்பரம் தாலுகாக்களுக்கு, ஒரே பகுதியில், நபார்டு திட்டத்தில் வட்ட செயல்முறை கிடங்கு அமைக்க, 11 கோடியே 10 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து அரசு உத்தரவிட்டது.தொடர்ந்து, கிடங்கு அமைக்க நிலம் ஒதுக்கீடு செய்துதர, மாவட்ட வருவாய் அலுவலர், கலெக்டர் ஆகியோரிடம், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.அதன்பின், வண்டலுார் தாலுகா, கீரப்பாக்கம் கிராமத்தில், கள்ளங்குத்து வகைப்பாடு உள்ள 5 ஏக்கர் நிலத்தை ஒதுக்கீடு செய்து, கடந்த ஆகஸ்ட் மாதம், வருவாய்த்துறையினர் அரசுக்கு கருத்துரு அனுப்பி வைத்தனர். அரசு உத்தரவு கிடைத்தபின், கிடங்கு பணிகள் துவங்கப்படும் என, வாணிபக கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.இங்கு, 5,000 டன் உணவு பொருட்களை சேமிக்கும் வகையில் வசதிகள் ஏற்படுத்தப்படும் என, நுகர்பொருள் வாணிப கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை