| ADDED : பிப் 10, 2024 10:19 PM
திருப்போரூர்:திருப்போரூர் அடுத்த புதுப்பாக்கம் ஊராட்சியில் உள்ள சென்னை டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லுாரியில், தேசிய அளவிலான மாதிரி நீதிமன்ற போட்டி, கடந்த 8ம் தேதி தொடங்கி நேற்று வரை, மூன்று நாட்கள் கல்லுாரி வளாகத்தில் நடந்தது.இப்போட்டியில், தேசிய அளவில், 24 அரசு மற்றும் தனியார் சட்டக் கல்லுாரிகளை சேர்ந்த 72 மாணவ -- மாணவியர் பங்கேற்றனர். போட்டியில், நீதிமன்றத்தில் வாதாடுவது போன்று, மாணவர்கள் வாதத்தை எடுத்து வைத்தனர்.இதில், வெற்றி பெற்ற அணிகள் தேர்வு செய்யப்பட்டன. போட்டி நிறைவு மற்றும் பரிசளிப்பு விழா நேற்று மாலை நடந்தது. சிறப்பு விருந்தினராக சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி சுந்தர் மோகன் பங்கேற்றார்.முதலிடம் பிடித்த கோவை அரசு சட்டக் கல்லுாரி, இரண்டாம் இடம் பிடித்த வேலுார் அரசு சட்டக் கல்லுாரி மாணவ - மாணவியருக்கு கோப்பை வழங்கினார். பங்கேற்ற அனைவருக்கும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.இந்நிகழ்ச்சியில், தமிழ்நாடு அரசு சட்டக்கல்வி இயக்குனர் விஜயலட்சுமி, கல்லுாரி முதல்வர் ஜெய கவுரி உட்பட பலர் பங்கேற்றனர்.