உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு /  நீரில் மூழ்கிய நெற்பயிர் கணக்கெடுப்பு பணி துவக்கம்

 நீரில் மூழ்கிய நெற்பயிர் கணக்கெடுப்பு பணி துவக்கம்

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்தில், 'டிட்வா' புயலால் பெய்த கனமழை காரணமாக மூழ்கிய நெற்பயிர் குறித்து கணக்கெடுக்கும் பணியில், வேளாண்மைத்துறை அலுவலர்கள், நேற்று ஈடுபட்டனர். செங்கல்பட்டு மாவட்டத்தில், சம்பா பருவத்திற்கு 31,000 ஏக்கர் விவசாய நிலங்களில் நெற்பயிர் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. மாவட்டத்தில் டிட்வா புயலால், சில நாட்களாக பெய்த கனமழையில் திருக்கழுக்குன்றம், திருப்போரூர், மதுராந்தகம் ஆகிய பகுதிகளில், 1,250 ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன. இதில் திருக்கழுக்குன்றம், திருப்போரூர் ஆகிய தாலுகாக்களில், அதிகமாக நெற்பயிர்கள் நீரில் மூழ்கி உள்ளன. இப்பகுதிகளை கணக்கெடுக்க, வேளாண்மைத்துறை இணை இயக்குநருக்கு, கலெக்டர் சினேகா நேற்று உத்தரவிட்டார்.அதன் பின், திருப்போரூர் அடுத்த ராயமங்கலம் கிராமத்தில், நீரில் மூழ்கிய நெற்பயிர் குறித்து கணக்கெடுக்கும் பணியில், வேளாண்மை இணை இயக்குநர் பிரேம்சாந்தி மற்றும் வேளாண்மை அலுவலர்கள் ஈடுபட்டனர். இதேபோன்று, மாவட்டம் முழுதும், நீரில் மூழ்கிய நெற்பயிர் குறித்து கணக்கெடுக்கும் பணியில், வேளாண்மைத் துறை அலுவலர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இதுதொடர்பாக, வேளாண்மை இணை இயக்குநர் பிரேம்சாந்தி கூறுகையில், ''மாவட்டத்தில், 225 ஏக்கர் நெற்பயிர் நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளது. ''விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்குவது தொடர்பாக, கலெக்டரிடம் ஆலோசனை செய்து, அரசுக்கு அறிக்கை அனுப்பி வைக்கப்படும்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ