சாலைகள் சீரமைக்க ரூ.140 கோடி அரசிடம் கோரும் தாம்பரம் மாநகராட்சி
தாம்பரம், தாம்பரம் மாநகராட்சியில், சேதமடைந்த சாலைகளை சீரமைக்க, 140 கோடி ரூபாய் கேட்டு, அரசுக்கு அறிக்கை அனுப்பப்பட்டு உள்ளது.தாம்பரம் மாநகராட்சியில், 5 மண்டலங்கள், 70 வார்டுகள் உள்ளன. இம்மாநகராட்சியில், முக்கிய மற்றும் உட்புற சாலைகள் என, 7,000த்துக்கும் மேற்பட்ட சாலைகள் உள்ளன. இதில், ஏகப்பட்ட சாலைகள் போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் குண்டும், குழியுமாக உள்ளன. பாதாள சாக்கடை மற்றும் குடிநீர் குழாய் பதிப்பு பணியால், பம்மல், அனகாபுத்துார், திருநீர்மலை பகுதிகளில், பல சாலைகள் சீர்குலைந்து விட்டன. அந்த வகையில், ஐந்து மண்டலங்களிலும், 800க்கும் மேற்பட்ட சாலைகள் சீர்குலைந்துள்ளன. இதனால், பொதுமக்கள் நாள்தோறும் பாதிப்பை சந்தித்து வருகின்றனர். இந்த சாலைகளை சீரமைக்க, மாநகராட்சியில் போதிய நிதி இல்லாததால், 140 கோடி ரூபாய் நிதி கேட்டு, அரசுக்கு அறிக்கை அனுப்பப்பட்டு உள்ளது.