செங்கல்பட்டு: செங்கல்பட்டு நகராட்சி பகுதிகளில் உள்ள மழைநீர் வடிகால்வாய்களை துார்வார ஒதுக்கப்படும் நிதியை முறையாக பயன்படுத்தாத நிலையில், முறைகேடு நடந்துள்ளதாக சமூக ஆர்வலர்கள் குற்றஞ்சாட்டி உள்ளனர். செங்கல்பட்டு நகராட்சியில் உள்ள 33 வார்டுகளில் ஜே.சி.கே.நகர், நத்தம், மேட்டுத்தெரு, வேதாசலம் நகர், அனுமந்தபுத்தேரி, அழகேசன் நகர், அண்ணா நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் உள்ளன. இங்குள்ள 3,935 தெருக்களில் வீடுகள், வணிக வளாகங்கள், தனியார் மருத்துவமனைகள், வங்கிகள், அரசு அலுவலகங்கள் உள்ளிட்டவை உள்ளன. வெள்ளத்தால் பாதிப்பு செங்கல்பட்டு நகரில், 62 கி.மீ., நீளத்திற்கு, மழைநீர் வடிகால்வாய் உள்ளது. நகரில் உள்ள வீடுகள், வணிக வளாகங்கள், மருத்துவமனைகள் உள்ளிட்ட இடங்களில் இருந்து வெளியேறும் கழிவுநீரானது, மழைநீர் கால்வாயில் விடப்படுகிறது. இதனால், நகராட்சி ஊழியர்களால், கால்வாயை பராமரிப்பு செய்ய முடியாத சூழல் ஏற்பட்டது. அதன் பின், கடந்த சில ஆண்டுகளாக, மழைநீர் கால்வாயை துார்வார, நகராட்சி பொது நிதியில் இருந்து பல லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டு, ஒப்பந்தம் விடப்பட்டு வருகிறது. தனியார் ஒப்பந்ததாரர்கள், இந்த பணிகளை செய்து வருகின்றனர். கடந்த 2015ம் ஆண்டு பலத்த மழை பெய்த போது, செங்கல்பட்டு ஜே.சி.கே.நகர், களத்துமேடு, வேதாசலம் நகர், அண்ணா நகர், ராகவனார் தெரு, அனுமந்தபுத்தேரி உள்ளிட்ட பகுதிகள், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டன. அப்போது, மழைநீர் கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்றி, கால்வாயை சீரமைக்க வேண்டுமென, நகராட்சி நிர்வாகம் மற்றும் வருவாய் துறையினர் முடிவு செய்தனர். அதன்பின், ஜே.சி.கே.நகரில் மழைநீர் கால்வாயில் இருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிகள் துவங்கின. ஆனால், இப்பணிகள் முழுமையாக முடிக்கப் படாமல் உள்ளன. வலியுறுத்தல் இதேபோன்று, செங்கல்பட்டு நகரின் பல்வேறு பகுதிகளில் மழைநீர் கால்வாய்கள் ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளதால், கால்வாய்கள் துார்ந்து வருகின்றன. இதனால், மழைக்காலங்களில் வெள்ளம் சூழ்ந்து, மேற்கண்ட பகுதிகள் கடுமையாக பாதிக்கப்படுகின்றன. அந்த நேரத்தில், நகராட்சி அதிகாரிகள் கவனம் செலுத்தி, மழைநீரை வெளியேற்றுகின்றனர். அதன்பின், இந்த பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காணாமல் கிடப்பில் போடுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதைத்தொடர்ந்து, நகராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில், வடகிழக்கு பருவ மழையை கருத்தில் கொண்டு, பாதிப்பு ஏற்படும் தாழ்வான பகுதிகளில் உள்ள மழைநீர் கால்வாய்களை துார்வார முடிவு செய்யப்பட்டது. இதன்படி ஜே.சி.கே.நகர், அண்ணா நகர், முனிசிபல் காலனி, புது ஏரி, அனுமந்தபுத்தேரி, ராகவனார் தெரு, காண்டீபன் தெரு, வேதாசலம் நகர் ஆகிய பகுதிகளில் உள்ள கால்வாய்களை, 'பொக்லைன்' இயந்திரம் மூலமாக துார்வாரி சீரமைக்க, 2025 - 26ம் ஆண்டு, பொது நிதியிலிருந்து, 11 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அத்துடன், அண்ணா நகரில் பிரதான கால்வாய்களை துார்வார 6.5 லட்சம் ரூபாய் என, மொத்தம் 17.50 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இப்பணிகளுக்கு 'டெண்டர்' விடப்பட்டு, தனியார் ஒப்பந்ததாரருக்கு அனுமதி வழங்கப்பட்டது. ஆனால், மழைநீர் கால்வாய்கள் பெயரளவிற்கு மட்டுமே துார்வாரப்பட்டுள்ளதாக, குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பெரும் பாலான பகுதிகளில், மழைநீர் கால்வாய் துார்வாரப் படாமல் உள்ளது. அத்துடன், மழைநீர் கால்வாயை துார்வார ஒதுக்கப்பட்ட நிதியில் முறையாக பணிகள் செய்யாமல், முறைகேடு நடந்துள்ளதாகவும், சமூக ஆர்வலர்கள் குற்றஞ்சாட்டி உள்ளனர். இந்த முறைகேடு, ஆண்டுதோறும் நடந்து வருவதாகவும் கூறியுள்ளனர். எனவே, மழைநீர் கால்வாயை துார்வாரிய பணிகளை, கலெக்டர் சினேகா ஆய்வு செய்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர். வரிப்பணம் ஏப்பம் செங்கல்பட்டு நகராட்சி பகுதிகளில் மழைநீர் கால்வாய்களை துார்வார, ஆண்டுதோறும் நிதி ஒதுக்கப்பட்டு வருகிறது. இப்பணிகளை முறையாக செய்து முடிக்காமல், பணிகள் முழுமையாக நடந்ததாக கணக்கு காட்டி, பணம் ஏப்பம் விடுகின்றனர். கனமழை பெய்தால் வேதாசலம் நகர், அண்ணா நகர், ஜே.சி.கே.நகர் பகுதிகளில், மழைநீர் தேங்கி நிற்கும். அத்துடன், மழைநீர் கால்வாய்கள் துார்வாரும் பணிகளை, அதிகாரிகள் முறையாக கண்காணிப்பதில்லை. இதனால், ஆண்டுதோறும் மக்கள் வரிப்பணம் வீணடிக்கப்பட்டு வருகிறது. - கே.வாசுதேவன், சமூக ஆர்வலர், செங்கல்பட்டு.