செம்மொழி தமிழ் சிற்ப பூங்கா சுற்றுலா பயணியர் காண அனுமதி
மாமல்லபுரம்,:மாமல்லபுரம் செம்மொழி தமிழ் சிற்ப பூங்காவை, அனைத்து சுற்றுலா பயணியரும் காணலாம் என, சுற்றுலா வளர்ச்சிக் கழக விடுதி நிர்வாகம் அனுமதித்துள்ளது.மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலை பகுதியில், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக கடற்கரை விடுதி இயங்குகிறது. பல்லவர் கால சிற்பங்களை காண வரும் சுற்றுலா பயணியர், இந்த விடுதியில் தங்குகின்றனர். கருத்தரங்கம், திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் விடுதியில் நடக்கின்றன.இங்கு தங்கும் பயணியரை கவர்வதற்காக, 2009ல் விடுதி வளாகத்தில், செம்மொழி தமிழ் சிற்ப பூங்கா அமைக்கப்பட்டது. இப்பூங்காவில், திருவள்ளுவர், தமிழக பழங்கால வாழ்வியல், கலை, இலக்கியம், அரசாட்சி, வீரம் உள்ளிட்டவற்றை உணர்த்தும் கற்சிலைகள் அமைக்கப்பட்டன.பூங்கா சிலைகளை, விடுதியில் தங்கும் பயணியர் மட்டுமே காணலாம். பிற பயணியருக்கு அனுமதி கிடையாது. மாமல்லபுரத்தின் மைய பகுதியில் உள்ள கற்சிற்பங்களை கண்டுகளிக்கும் பயணியர், 2 கி.மீ., தொலைவில் உள்ள செம்மொழி சிற்ப பூங்கா குறித்து தெரிவதில்லை.பயணியர் வருகை இல்லாததால், பூங்கா வீணாகி வருவதாக நம் நாளிதழில் விரிவான செய்தி வெளியிடப்பட்டது. பூங்காவை காண்பதற்கு மற்ற பயணியரையும் அனுமதிப்பதாக, தற்போது விடுதி நிர்வாகம் அறிவித்துள்ளது.செம்மொழி பூங்கா சிலைகள், படங்கள் மற்றும் இருப்பிடம் அறியும் ஸ்கேனிங் குறியீடு ஆகியவற்றுடன், சிற்ப பகுதிகளில் அறிவிப்பு பலகைகளை அமைக்கப்பட்டுள்ளது.