உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / நள்ளிரவில் தீப்பற்றி எரிந்த கார் பயணியரை காப்பாற்றிய ஓட்டுனர்

நள்ளிரவில் தீப்பற்றி எரிந்த கார் பயணியரை காப்பாற்றிய ஓட்டுனர்

கூடுவாஞ்சேரி:கூடுவாஞ்சேரி ஜி.எஸ்.டி., சாலையில், நள்ளிரவில் தீப்பிடித்து கார் நாசமானது. ஓட்டுனர் சமயோஜிதத்தால், காருக்குள் இருந்த பயணியர் உயிர் தப்பினர்.விழுப்புரம் மாவட்டம், வானுார் தாலுகா, சின்னகொலுவாரி, நீலியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ஆனந்தன், 32; கார் ஓட்டுனர்.இவர், விழுப்புரத்தைச் சேர்ந்த அப்துல் ரஹ்மான், 34, என்பவருக்குச் சொந்தமான சுசுஹி பிரஸ்சா காரில், ஒரு பெண் உட்பட நான்கு பயணியரை, நேற்று முன்தினம் கும்பகோணத்தில் ஏற்றிக் கொண்டு, சென்னை, கீழ்க்கட்டளைக்கு வந்து கொண்டிருந்தார்.அப்போது, இரவு 10:40 மணியளவில், கூடுவாஞ்சேரி ஜி.எஸ்.டி., சாலையில், ஆலடிபட்டியான் காபி கடை அருகே வரும் போது, காரின் முன்பகுதியில் இருந்து புகை வந்துள்ளது.உடனே ஆனந்தன், சாலையின் ஓரத்தில் காரை நிறுத்தி, பயணியரை பத்திரமாக கீழே இறக்கினார்.அப்போது, தீயின் வேகம் அதிகரித்து, கார் முழுதும் தீ பரவியது.இதுகுறித்து காவல் கட்டுப்பாட்டு அறைக்கு ஆனந்தன் கூறிய தகவல்படி, கூடுவாஞ்சேரி சிறப்பு எஸ்.ஐ., கிருஷ்ணவேணி சம்பவ இடம் வந்து, மறைமலைநகர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார்.சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள், தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை அணைத்தனர்.இந்த சம்பவத்தில், கார் முற்றிலும் எரிந்து நாசமானது. பயணியரின் மூன்று மொபைல் போன்கள், 10,000 ரூபாய் பணம் மற்றும் உடைமைகள் எரிந்து சாம்பலாகின. டிரைவரின் சாமர்த்தியத்தால், யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இதுகுறித்து, பொத்தேரி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை