| ADDED : ஜன 12, 2024 11:22 PM
மறைமலைநகர்:மறைமலைநகர் அடுத்த ரயில் நகரைச் சேர்ந்தவர் யுவராஜ், 38; தனியார் நிறுவன ஊழியர். இவருக்கு திருமணமாகி திவ்யா என்ற மனைவி உள்ளார்.கடந்த 10ம் தேதி மாலை யுவராஜ் வேலைக்கு சென்ற நிலையில், திவ்யா வீட்டை பூட்டி விட்டு, மறைமலைநகருக்கு சென்றார். மீண்டும் வந்து பார்த்த போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்த 30 சவரன் தங்க நகைகள் கொள்ளை போனது தெரிந்தது.இது குறித்து யுவராஜ் அளித்த புகாரின்படி, மறைமலைநகர் போலீசார் மற்றும் கைரேகை நிபுணர்கள் தடயங்களை சேகரித்து விசாரித்தனர். விசாரணையில், மதுராந்தகம் அடுத்த ஜமீன் எண்டாத்துார் பகுதியைச் சேர்ந்த சதீஷ், 27, திருட்டில் ஈடுபட்டது தெரிந்தது.இவர், மறைமலைநகர் பகுதியில் வீடு வாடகைக்கு எடுத்து தங்கி, புறநகர் பகுதியில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது தெரிந்தது. இவர் மீது அச்சரப்பாக்கம் உள்ளிட்ட காவல் நிலையங்களில் கொள்ளை வழக்குகள் நிலுவையில் உள்ளன.மேலும், சதீஷிடம் நடத்திய விசாரணையில், யுவராஜ் வீட்டில் இருந்து 2.5 சவரன் தங்க நகைகள் மட்டுமே திருடி, மறைமலைநகரில் உள்ள அடகு கடையில் வைத்தது தெரியவந்தது.இதையடுத்து, சந்தேகமடைந்த போலீசார் யுவராஜிடம் விசாரணை நடத்தியதில், 2.5 சவரன் மட்டுமே திருடு போனதை ஒப்புக்கொண்டார். யுவராஜை எச்சரித்து அனுப்பினர்.அதன்பின், சதீஷை செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.