| ADDED : மார் 20, 2024 12:18 AM
செங்கல்பட்டு:திருச்சி -- சென்னை தேசிய நெடுஞ்சாலையில், தினமும் பல்லாயிரக்கணக்கான லாரிகள், பேருந்துகள், கார், இருசக்கர வாகனங்கள் சென்று வருகின்றன.புறநகர் பகுதிகளான பரனுார், மகேந்திரா சிட்டி, சிங்கபெருமாள் கோவில், மறைமலை நகர், காட்டாங்கொளத்துார், பொத்தேரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில், தேசிய நெடுஞ்சாலை முழுதும் மணல் திட்டுகள் குவிந்துள்ளன.இதனால், அச்சாலையில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் வழுக்கி கீழே விழுந்து, அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன.இந்நிலையில், நேற்று காலை, மகேந்திரா சிட்டி சோதனைச்சாவடி அருகில், சாலையில் குவிந்து கிடந்த மணல் திட்டுகளை, பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த மறைமலை நகர் போலீசார், துடைப்பம் வாயிலாக சுத்தம் செய்து அப்புறப்படுத்தினர்.வாகன ஓட்டிகள் கூறியதாவது:சாலையில், பல இடங்களில் மணல் திட்டுகள் குவிந்து உள்ளதால், இருசக்கர வாகனங்களில் பிரேக் பிடிக்கும்போது, வழுக்கி கீழே விழுவது தொடர்கதையாக உள்ளது.மேலும், விபத்தின் போது உடைந்து விழும் கண்ணாடித் துண்டுகள் அகற்றப்படுவது இல்லை. இவற்றை நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் கண்டும் காணாமல் உள்ளனர்.இவ்வாறு அவர்கள் கூறினர்.