பல்லாவரம்:தாம்பரம் மாநகராட்சி, இரண்டாவது மண்டலம், 21வது வார்டு, பழைய பல்லாவரம், திருத்தணி நகரில், 12 தெருக்கள் உள்ளன.இப்பகுதியில், பாதாள சாக்கடை திட்டம் பயன்பாட்டில் உள்ளது. எனினும், பாதாள சாக்கடை வசதி ஏற்படுத்தாத சில இடங்களில் இருந்து வெளியேறும் கழிவுநீர், திருத்தணி நகர் கால்வாய் வழியாக செல்கிறது.இந்த கால்வாய் பணி முழுமையாக முடியாததால், தண்ணீர் தேங்கி சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. தவிர, திருத்தணி நகர், ஒன்றாவது பிரதான சாலையின் இரு இடங்களில், கால்வாய் ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளது.இதுகுறித்து, திருத்தணி நகர் குடியிருப்போர் நலச்சங்கத்தினர் கூறியதாவது:இரண்டாவது பிரதான சாலையில், பொதுப்பணித்துறை அளவீடு செய்து கொடுத்தும், கால்வாய் கட்டாமல், மாநகராட்சி நிர்வாகம் மெத்தனம் காட்டி வருகிறது.அதேபோல், இப்பகுதியில் உள்ள அசோகா பூங்கா பராமரிப்பின்றி, மோசமான நிலையில் உள்ளது. 75 லட்சம் ரூபாய் செலவில் சீரமைக்கப்படும் என அறிவித்தும், அதற்கான எந்த அறிகுறியும் தெரியவில்லை.திருத்தணி நகரில் உள்ள தெருக்களில், தெரு பெயர் பலகைகள் இல்லை. மெட்ரோ குடிநீர் சரியாக வருவதில்லை. மழைநீர் கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்றி, கழிவுநீர் தேங்காமல் செல்லும் வகையில், மாநகராட்சி கமிஷனர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.