உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு /  புறவழி சாலையை ஆக்கிரமிக்கும் வாகனங்களால் போக்குவரத்து பாதிப்பு

 புறவழி சாலையை ஆக்கிரமிக்கும் வாகனங்களால் போக்குவரத்து பாதிப்பு

மதுராந்தகம்: மதுராந்தகம் அடுத்த அய்யனார் கோவில் சந்திப்பு செல்லும் புறவழிச் சாலையில் வாகனங்கள் நிறுத்தப்படுவதால், போக்குவரத்து பாதிக்கப்பட்டு வருகிறது. மதுராந்தகத்தில், சென்னை -- திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி மதுராந்தகம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம், வட்டாட்சியர் அலுவலகம், வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் மற்றும் மதுராந்தகம் எம்.எல்.ஏ., அலுவலகம் ஆகியவை அமைந்துள்ளன. இந்த அலுவலகங்களுக்குச் செல்லும் வகையில், தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி புறவழிச் சாலை அமைக்கப்பட்டுள்ளது. தற்போது, அய்யனார் கோவில் சந்திப்பு பகுதி வழியாக கடந்து செல்லும் வாகனங்கள் அனைத்தும், புறவழிச் சாலையைப் பயன்படுத்தி வருகின்றன.இந்த புறவழிச் சாலையில், லாரிகள் பழுது பார்ப்பு மற்றும் பஞ்சர் கடை, பழைய கதவு, ஜன்னல் விற்பனை செய்யும் கடைகள் உள்ளன. தற்போது, இந்த புறவழிச்சாலையின் ஒரு மார்க்கத்தை முழுதுமாக ஆக்கிரமித்து வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன. இதனால், புதிதாக சாலை அமைக்கப்பட்டும், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இந்த சாலையை வட்டாட்சியர், வருவாய் கோட்டாட்சியர், எம்.எல்.ஏ., மற்றும் அரசு அதிகாரிகள் என, அனைத்து தரப்பினரும் பயன்படுத்தி வருகின்றனர். ஆனால், ஆக்கிரமிப்பு குறித்து புகார் அதிகமாக வந்தும், அதிகாரிகள் யாரும் கண்டுகொள்வதில்லை. எனவே, இந்த புறவழிச்சாலையை ஆக்கிரமித்து நிறுத்தப்படும் வாகனங்களை அப்புறப்படுத்த, தேசிய நெடுஞ்சாலைத் துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ