| ADDED : பிப் 07, 2024 11:04 PM
திருப்போரூர்:திருப்போரூர் அடுத்த இள்ளலுார் பகுதியில், கடந்த ஆண்டு பிப்., 16ம் தேதி, திருட்டு வழக்கு தொடர்பாக போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.அப்போது, அங்கு நின்றுகொண்டிருந்த காரில் இருந்தவர்களிடம் விசாரித்தனர். காரையும் ஆய்வு செய்தனர். அதில், மது பாட்டில்கள், மூன்று துப்பாக்கிகள், தோட்டாக்கள் மற்றும் கைக்கடிகாரங்கள் இருந்தன.இவை அனைத்தையும் போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தினர். அதில், செங்காடு கிராமத்தை சேர்ந்த வசந்தன், 33, முட்டுக்காடு பகுதியை சேர்ந்த பிரித்திவிராஜ், 42, மைசூரை சேர்ந்த கார்த்திகேயன், 41, ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.இந்நிலையில், திருப்போரூர் காவல் நிலையத்தில் பதிவான இந்த வழக்கு, தற்போது சென்னை சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரணைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.இது குறித்து, திருப்போரூர் போலீசார் கூறுகையில், 'இந்த வழக்கு தொடர்பாக, சி.பி.சி.ஐ.டி., போலீசார் தாமாக முன்வந்து விசாரனை செய்கின்றனர்' என்றனர்.