குரோம்பேட்டை மருத்துவமனையில் தரைதள நோயாளிகள் இடமாற்றம்
குரோம்பேட்டை:தென் சென்னையில் உள்ள ஒரே அரசு மருத்துவமனை, குரோம்பேட்டை மருத்துவமனை. இங்குள்ள பழைய கட்டடம், ஜி.எஸ்.டி., சாலையைவிட தாழ்வாக இருப்பதால், ஒவ்வொரு மழைக்கும், மருத்துவமனைக்குள் வெள்ளம் புகுந்து, தரைதளத்தில் 2, 3 அடி உயரத்திற்கு தண்ணீர் நிற்கும்.அதன் பின், தரைதளத்தில் உள்ள நோயாளிகள் வேறு இடத்திற்கு மாற்றப்படுவர். மருந்தகம், வெளி நோயாளிகள் பிரிவும் மாற்றப்படும். ஒவ்வொரு ஆண்டும், மழை பெய்த பிறகே, இந்த நடவடிக்கை எடுக்கப்படும்.இந்தாண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, மழை துவங்குவதற்கு முன்னரே, தரை தளத்தில் இருந்த நோயாளிகள், முதல் மாடிக்கு மாற்றப்பட்டனர். அதேபோல், மருந்தகம், வெளி நோயாளிகள் பிரிவு, அவசர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டன.மேலும், வெள்ளம் தேங்கினால், அதை அகற்ற, மின் மோட்டார், ஜெனரேட்டர் ஆகியவை தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.இந்த நிலையில், அங்கு மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைள் குறித்து, செங்கல்பட்டு கலெக்டர் அருண்ராஜ், நேற்று மதியம் நேரில் ஆய்வு செய்து, நிர்வாகிகளிடம் கேட்டறிந்தார்.