உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / மண் ஏற்றி செல்லும் லாரிகள் கிராம மக்கள் சிறைபிடிப்பு

மண் ஏற்றி செல்லும் லாரிகள் கிராம மக்கள் சிறைபிடிப்பு

செய்யூர், வாழைப்பட்டு ஏரியில் இருந்து மண் ஏற்றிச்செல்லும் லாரிகளால் வாகன ஓட்டிகள் பீதியடைவதால், கிராம மக்கள் லாரிகளை சிறை பிடித்தனர். மாமல்லபுரம்- - புதுச்சேரி இடையிலான கிழக்கு கடற்கரை சாலையை நான்கு வழிச்சாலையாக விரிவாக்கம் செய்ய தனியார் நிறுவனத்திடம் ஒப்பந்தம் அளிக்கப்பட்டு, கடந்த இரண்டு ஆண்டுகளாக பணிகள் நடந்து வருகின்றன. பொதுப்பணித்துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ள ஏரிகளில் இருந்து லாரிகளில் மண் கொண்டு வரப்பட்டு, சாலை தாழ்வாக உள்ள பகுதிகள், பாலங்கள் அமையும் இடங்களில் கொட்டி, சாலை உயர்த்தி அமைக்கப்பட்டு வருகிறது. இதற்காக, செய்யூர் அடுத்த வாழைப்பட்டு ஏரியில் இருந்து மண் எடுக்கும் பணி, கடந்த சில வாரங்களாக நடந்து வருகிறது. இந்த ஏரியில் இருந்து மண் எடுத்துச் செல்லும் லாரிகள், அதிக பாரம் ஏற்றிக்கொண்டு, தார்ப்பாய் மூடாமல் சென்று வருகின்றன. லாரியில் இருந்து சிதறும் ஏரி மண் நல்லுார் - வில்லிப்பாக்கம் மாநில நெடுஞ்சாலையில் குவிந்து, வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும், தினமும் நுாற்றுக்கணக்கான லாரிகள் செல்வதால், குறுகலாக உள்ள இச்சாலையில் செல்ல, வாகன ஓட்டிகள் அச்சமடைகின்றனர். இதனால், வாழைப்பட்டு - நல்லுார் இடையே உள்ள சாலையை தற்காலிகமாக விரிவாக்கம் செய்ய வேண்டுமென, நேற்று காலை 9:30 மணியளவில், கிராம மக்கள் லாரிகளை சிறை பிடித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த செய்யூர் போலீசார், கிராம மக்களிடம் பேச்சு நடத்தினர். உடனடியாக 'பொக்லைன்' இயந்திரம் வரவழைத்து, சாலையோரம் இருந்த மரங்களை அகற்றி, தற்காலிகமாக சாலையை விரிவாக்கம் செய்தனர். இதையடுத்து, கிராம மக்கள் கலைந்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ