உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / நகர்ப்புறங்களில் ஓட்டுப்பதிவு சதவீதம்...குறைவு!:சொந்த ஊர் செல்வது தான் காரணமா?

நகர்ப்புறங்களில் ஓட்டுப்பதிவு சதவீதம்...குறைவு!:சொந்த ஊர் செல்வது தான் காரணமா?

காஞ்சிபுரம்:சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில், கிராமப்புறங்களில் அதிகளவில் ஓட்டுப்பதிவு நடந்துள்ளது. ஆனால், நகர்ப்புறங்களில் ஓட்டுப்பதிவு சதவீதம் குறைந்து வருவதால், அதை அதிகரிக்க வேண்டிய கட்டாயத்தில், தேர்தல் கமிஷன் ஈடுபட்டுள்ளது.தமிழகத்தில் லோக்சபா தேர்தல் வரும் 19ம் தேதி நடைபெற உள்ள நிலையில், தேர்தல் நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும், தேர்தல் கமிஷன் மேற்கொண்டு வருகிறது.சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில், தேர்தலுக்கான முன்னேற்பாடுகள் மட்டுமல்லாமல், 100 சதவீத ஓட்டுப்பதிவை வலியுறுத்தி பல்வேறு விழிப்புணர்வு பணிகளையும், தேர்தல் அதிகாரிகள் மேற்கொள்கின்றனர்.கிராமப்புறங்களில் ஊர்வலம், பேரணி நடத்துவது, கல்லுாரி மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவது, சிலிண்டர், தண்ணீர் கேன், வாகனங்களில் விழிப்புணர்வு ஸ்டிக்கர் ஒட்டுவது, கோலமிடுவது என, பல வகைகளில், 100 சதவீத ஓட்டுப்பதிவை வலியுறுத்தி, அதிகாரிகள் பணியாற்றி வருகின்றனர்.ஆனால், கடந்த தேர்தல்களில் பதிவான ஓட்டு சதவீதத்தை கணக்கிடும்போது, சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் நகர்ப்புறங்களைவிட கிராமங்களில், அதிகப்படியான ஓட்டு பதிவாகியிருப்பது தெரியவந்துள்ளது.காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு உட்பட்ட ஆலந்துார் சட்டசபை தொகுதியில், 2021ல் நடந்த சட்டசபை தேர்தலின்போது, 61.1 சதவீத ஓட்டுப்பதிவு மட்டுமே பதிவானது.காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஒவ்வொரு தேர்தலிலும் அதிக ஓட்டு சதவீதம் பதிவாகும் தொகுதியாக, உத்திரமேரூர் தொகுதி உள்ளது. முழுதும் கிராமங்கள் நிறைந்த பகுதியாகவும், படிப்பறிவு பெற்றவர்கள் குறைவாகவும் உள்ள உத்திரமேரூர் தொகுதியில், 80.8 சதவீதம் பதிவாகியுள்ளது.செங்கல்பட்டு சட்டசபை தொகுதியிலும், கடந்த தேர்தலிலும் 63.2 சதவீதம் மட்டுமே ஓட்டு பதிவாகியுள்ளது. மாவட்டத்தின் தலைநகராக அத்தொகுதி இருந்தும், ஓட்டு சதவீதம் அதிகரிப்பதில் சிக்கல் உள்ளது.அதேசமயம் செய்யூர், மதுராந்தகம் ஆகிய தொகுதிகள் முழுதும் கிராமப்புறங்கள் நிறைந்தவை. இந்த தொகுதிகளிலும், 80 சதவீதம் வரை, கடந்த சட்டசபை தேர்தலின்போது ஓட்டு பதிவாகியுள்ளது.சென்னையின் புறநகரான தாம்பரம், பல்லாவரம், சோழிங்கநல்லார் தொகுதிகளில், 60 சதவீதத்திற்கும் குறைவாகவே ஓட்டு பதிவாகி உள்ளது.இப்பகுதிகளில் தேர்தல் விழிப்புணர்வு பணிகளை, பல வகைகளில் அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். இருப்பினும் தாம்பரம், ஆலந்துார், சோழிங்கநல்லுார், பல்லாவரம் ஆகிய தொகுதிகளில் ஓட்டு சதவீதம் அதிகரிக்காமலேயே உள்ளது. கடந்த பல தேர்தல்களில் இது உறுதியாகியுள்ளது.சென்னையின் புறநகர் பகுதியில் படிப்பறிவு பெற்றவர்களும், பொருளாதார ரீதியில் வளர்ந்தவர்களாக பலரும் உள்ள நிலையில், தேர்தலன்று ஓட்டளிக்க கூட ஆயிரக்கணக்கான வாக்காளர்கள் விரும்புவதில்லை.இம்முறை, ஏப்., 19ல் நடக்கும் லோக்சபா தேர்தல், வெள்ளிக்கிழமையன்று வருவதால், அடுத்த இரு நாட்கள் வார விடுப்பு என்பதாலும், கோடை விடுமுறைக்கு வாக்காளர்கள் வெளியூர்களுக்கு படையெடுத்தால், ஓட்டுப்பதிவு மேலும் பாதிக்கும்.ஓட்டளிப்பதன் அவசியம், கடமை போன்றவை உணர்ந்து, வாக்காளர்கள் அனைவரையும் ஓட்டளிக்க வைக்க, கிராமப்புறங்களைவிட நகர்ப்புறங்களில் விழிப்புணர்வு பணிகளை தீவிரப்படுத்த வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.

2021 சட்டசபை தேர்தலில் பதிவான ஓட்டு சதவீதம்

காஞ்சிபுரம் மாவட்டம்காஞ்சிபுரம் - 74.2உத்திரமேரூர் - 80.8ஸ்ரீபெரும்புதுார் - 74.3ஆலந்துார் - 61.1செங்கல்பட்டு மாவட்டம்மதுராந்தகம் - 80.9செய்யூர் - 78.2திருப்போரூர் - 76.2செங்கல்பட்டு - 63.2தாம்பரம் - 59.9பல்லாவரம் - 61.0சோழிங்கநல்லுார் - 55.5திருவள்ளூர் மாவட்டம்கும்மிடிபூண்டி - 78.2பொன்னேரி - 77.9திருத்தணி - 79.4திருவள்ளூர் - 77.9பூந்தமல்லி - 72.8ஆவடி - 67.4மதுரவாயல் - 60.1அம்பத்துார் - 61.9மாதவரம் - 66.6திருவொற்றியூர் - 64.9

சென்னை மாவட்டம்

டாக்டர்.ராதாகிருஷ்ணன் நகர் - 70.4பெரம்பூர் - 62.9கொளத்துார் - 61.6வில்லிவாக்கம் - 55.8திரு.வி.க.,நகர் - 60.4எழும்பூர் - 43.0ராயபுரம் - 62.4துறைமுகம் - 57.3சேப்பாக்கம்-திருவல்லிக்கேனி - 57.8ஆயிரம் விளக்கு - 56.0அண்ணா நகர் - 57.1விருகம்பாக்கம் - 57.4சைதாப்பேட்டை - 57.0தி.நகர் - 55.7.மயிலாப்பூர் - 56.2வேளச்சேரி - 55.6

சென்னையில் குறைவது ஏன்?

மாவட்ட தேர்தல் அதிகாரிகள் கூறியதாவது:சென்னையை பொறுத்தவரை அதிகம் படித்தவர்கள், வசதி படைத்தவர்கள், நடுத்தர வர்க்கத்தினர் அதிகம் உள்ளனர். சென்னையில் வசதி குறைந்தவர்கள் பகுதிகளில், சராசரி ஓட்டுப்பதிவு 70 சதவிதத்துக்கு மேல் உள்ளது. அதேநேரம், வசதியானவர்கள், நடுத்தர வர்க்கத்தின் வசிக்கும் பகுதிகளில், 60 சதவீதத்துக்கு கீழ் தான் ஓட்டுப்பதிவாகிறது. பெரும்பாலானோர் சொந்த ஊர்களுக்கும், சுற்றுலாவுக்கும் சென்று விடுகின்றனர். சிலர், அரசியல்வாதிகள் மீதான அதிருப்தியில் ஓட்டுப்போட ஆர்வம் காட்டுவதில்லை. இந்த தேர்தலில், சென்னையில் ஓட்டு சதவீதத்தை அதிகரிக்க பல்வேறு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம். அதன்படி, பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் கலை நிகழ்ச்சிகள், துண்டு பிரசுரம் வாயிலாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.ஐ.டி., பணியாளர்கள், கல்லுாரி மாணவர்களிடமும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.மெரினா கடற்கரையில், வரும் ஞாயிற்றுக்கிழமை அன்று மணற்சிற்பங்கள் வாயிலாக ஓட்டளிப்பதன் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட உள்ளது. இதுபோன்ற பல்வேறு காணங்களால், இந்த தேர்தலில் சென்னையில் ஓட்டுப்பதிவு சதவீதம் உயரும் என்ற நம்பிக்கை உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை