செங்கல்பட்டு:செங்கல்பட்டு மாவட்டத்தில், நீர்வளத்துறை கட்டுப்பாட்டில் உள்ள, 300க்கும் மேற்பட்ட ஏரிகளில், 75 சதவீதம் நீர் இருப்பு உள்ளது. அதனால், வரும் சொர்ணவாரி பருவ விவசாயத்திற்கும், இந்தாண்டு குடிநீர் தேவைக்கும் பற்றாக்குறை ஏற்படாது என, நீர்வளத்துறை அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.செங்கல்பட்டு மாவட்ட நீர்வளத்துறை கட்டுப்பாட்டில், 528 ஏரிகள் உள்ளன. மாவட்டத்தில், கடந்த ஆண்டு பெய்த வடகிழக்கு பருவமழையால், அனைத்து ஏரிகளும் முழுமையாக நிரம்பின.மாவட்டத்தில் பெரிய ஏரியான மதுராந்தகம் ஏரி மற்றும் கொளவாய் ஏரியில் சீரமைக்கும் பணி நடைபெற்று வருவதால், அவற்றில் நீர் தேக்கி பராமரிக்கவில்லை.மதுராந்தகம், செய்யூர், திருக்கழுக்குன்றம், திருப்போரூர், செங்கல்பட்டு, வண்டலுார், தாம்பரம் ஆகிய தாலுகா பகுதிகளில், ஏரி பாசனம் மற்றும் கிணற்று பாசனம் வாயிலாக, விவசாயம் செய்யப்படுகிறது.இதுமட்டும் இன்றி, ஏரிகளில், ஊராட்சிகளுக்கு குடிநீர் வழங்கும் கிணறு அமைத்து, குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.மாவட்டத்தில், பாலுார், பொன்விளைந்தகளத்துார், கொண்டங்கி, மானாமதி, சிறுதாவூர், தையூர், காயார், பல்லவன்குளம் உள்ளிட்ட 68 ஏரிகளில், 75 சதவீதத்திற்கும் மேல் தண்ணீர் இருப்பு உள்ளது.இதேபோன்று, 276 ஏரிகளில் 75 சதவீதம் மற்றும் குறைவாகவும், 139 ஏரிகளில் 50 சதவீதமும், 45 ஏரிகளில் 25 சதவீதமும் தண்ணீர் இருப்பு உள்ளது.இதனால், 75 சதவீதம் முதல் 50 சதவீதம் ஏரிகளில் தண்ணீர் உள்ளதால், விவசாய கிணறுகளில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது.கோடைகாலத்தில், ஏரி, கிணற்று பாசனம் வாயிலாக, சொர்ணவாரி பருவத்தில், அதிகமாக விவசாயம் செய்யப்படும். ஏரி பகுதிகளில் கிணறுகள் அமைந்துள்ள ஊராட்சிகளில், கோடைகாலத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு குறைவாக உள்ளது.மாவட்டத்தில், செங்கல்பட்டு, திருக்கழுக்குன்றம், திருப்போரூர், மதுராந்தகம், செய்யூர் ஆகிய தாலுகா பகுதிகளில், வனப்பகுதிகள் உள்ளன.இங்கு, மான், முயல், காட்டுப்பன்றிகள், மயில் உள்ளிட்ட விலங்குகள் ஏராளமாக உள்ளன. வனப்பகுதியை ஒட்டி உள்ள ஏரிகளில் தண்ணீர் உள்ளதால், வன விலங்குகளுக்கு குடிநீர் ஆதாரமாக உள்ளது.இதேபோன்று, கால்நடைகளுக்கும் குடிநீர் ஆதாரமாக உள்ளது. ஏரிகளில் உள்ள தண்ணீரை, விவசாய நிலங்களுக்கு முறையாக பாசன வசதி செய்தால், அதிகமாக விவசாய சாகுபடி செய்யலாம் என, நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.ஏரிகளில் இருந்து மீன் பிடிப்பதற்காக, மோட்டார் பயன்படுத்தி தண்ணீர் வெளியேற்றுவதை தடை செய்ய வேண்டும் என, விவசாயிகள் கருதுகின்றனர்.எனவே, ஏரிகளில் உள்ள தண்ணீரை முறையாக விவசாயிகள் பயன்படுத்த வேண்டும் என, நீர்வளத்துறை அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.கோடைகாலத்திலும் ஏரியில் தண்ணீர் இருப்பு உள்ளதால், சொர்ணவாரி பட்டத்தில் விவசாயம் செய்வதில் சிக்கல் ஏதும் இல்லை. சம்பா, நாவரை பட்டத்தில், ஒரு ஏக்கருக்கு 30 மூட்டை கிடைக்கும். இந்த பருவத்தில், ஒரு ஏக்கருக்கு 35 மூட்டை நெல் கிடைக்கும். விவசாயம் மட்டும் இன்றி, கால்நடை வளர்ப்பும் நீர் இருப்பால் மேம்படும்.- கோ.நைனியப்பன்,எடையூர், திருக்கழுக்குன்றம்.