நடமாடும் ரேஷன் கடை அருங்குன்றத்தில் அமைக்கப்படுமா?
திருப்போரூர்:அருங்குன்றம் ஊராட்சியில் வசிக்கும் இருளர்கள், தங்கள் பகுதியில் நடமாடும் ரேஷன் கடை அமைக்க வேண்டுமென, கோரிக்கை விடுத்துள்ளனர். திருப்போரூர் ஒன்றியத்தில் அடங்கிய அருங்குன்றம் ஊராட்சியில், பெருமாள் கோவில் அருகே ரேஷன் கடை உள்ளது. இந்த ஊராட்சியைச் சேர்ந்த இருளர் மக்கள் மற்றும் மற்ற சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் என, 150க்கும் மேற்பட்ட குடும்பத்தினர், ஊராட்சியிலிருந்து 3 கி.மீ., துாரத்தில் வசித்து வருகின்றனர். இவர்கள் மாதந்தோறும் 3 கி.மீ., நடந்து வந்து, ரேஷன் பொருட்களை வாங்குகின்றனர். பின், அவற்றை தலையில் சுமந்து வீட்டிற்கு கொண்டு செல்கின்றனர். இருளர் மக்களில் அனைவரும், தினக்கூலி வேலைக்குச் செல்பவர்கள். இதனால் அவர்கள், பள்ளிக்கூடம் செல்லும் தங்கள் பிள்ளைகளை ரேஷன் கடைக்கு அனுப்பிவிட்டு, வேலைக்குச் செல்கின்றனர். இதனால், மாணவர்களின் கல்வி பாதிக்கிறது. மேலும், 'சர்வர்' பிரச்னை, பொருட்கள் இருப்பு குறைவு போன்ற நேரங்களில், மீண்டும் ரேஷன் கடைக்கு செல்ல வேண்டியுள்ளதால், அனைவரும் சிரமப்படுகின்றனர். எனவே, இப்பகுதியில் நடமாடும் ரேஷன் அமைக்க வேண்டுமென, கடந்த இரண்டு ஆண்டுகளாக, உணவுப் பொருள் வழங்கல் துறை அதிகாரிகளிடம் தொடர்ந்து மனு அளித்து வருகின்றனர். ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என, அவர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். எனவே, நடமாடும் ரேஷன் கடை அமைக்க, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, இருளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நடமாடும் ரேஷன் கடை அமைக்காவிட்டால், அடுத்த மாதம் ரேஷன் பொருட்கள் வாங்காமல் புறக்கணிக்கவும் முடிவு செய்துள்ளனர்.