4 அங்குல உயரம் அமைக்கப்படும் சாலை கந்தசுவாமி கோவிலில் மழைநீர் செல்லுமா?
திருப்போரூர்:திருப்போரூரில், புகழ்பெற்ற கந்தசுவாமி கோவில் அமைந்துள்ளது. இங்கு, விசேஷ நாட்கள் உட்பட அனைத்து நாட்களிலும், பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராளமான பக்தர்கள் வந்து, சுவாமி தரிசனம் செய்துவிட்டுச் செல்கின்றனர்.இக்கோவிலுக்கு செல்லும் பிரதான வழியாக உள்ள, வடக்கு குளக்கரை சாலை உள்ளது. இந்த வடக்கு குளக்கரை சாலை வழியாக பக்தர்கள் வந்து, தெற்கு பக்க நான்கு கால் மண்டப நுழைவாயிலில் உள்ளே செல்கின்றனர். அதேபோல், கிழக்கு குளக்கரை சாலையில் நான்கு கால் காவடி மண்டபம் அமைந்துள்ளது. கிழக்கு குளக்கரை சாலையில், பேரூராட்சி நிர்வாகம் சார்பில் சிமென்ட் சாலை அமைக்கும் பணிகள் நடக்கின்றன.தற்போதுள்ள தரைமட்டத்தில் இருந்து 4 அங்குல உயரத்தில் சாலை அமைப்பதால், கோவில் தெற்கு பக்க நான்கு கால் மண்டபம் நுழைவாயில் பள்ளத்தில் இருப்பது போல் உள்ளது.இதனால், மழைநீர் கோவிலுக்குள் புகுவதுடன், அதன் பழமை அமைப்பு மாறுதல் ஏற்படும் என, பக்தர்கள் அச்சமடைந்தனர்.இதுகுறித்து, பேரூராட்சி நிர்வாகத்திடம் பக்தர்கள் மற்றும் ஹிந்து முன்னணி அமைப்பினர் கருத்து தெரிவித்தனர்.இதையடுத்து நேற்று முன்தினம், பேரூராட்சி நிர்வாகத்தினர் அங்கு ஆய்வு மேற்கொண்டனர். பக்தர்கள் கருத்தின்படி சிமென்ட் சாலை அமைக்கும் போது மழைநீர் உள்ளே புகாத வகையிலும், நான்கு கால் காவடி மற்றும் நுழைவாயில் மண்டபத்திற்கு எந்த இடையூறும் இல்லாத வகையிலும் சாலை அமைக்கப்படும் என, பக்தர்களிடம் தெரிவித்தனர்.