உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / திருமுடிவாக்கத்தில் 3 நாள் தொழிற்கண்காட்சி துவக்கம் 184 குறு, சிறு நிறுவனங்கள் பங்கேற்பு

திருமுடிவாக்கத்தில் 3 நாள் தொழிற்கண்காட்சி துவக்கம் 184 குறு, சிறு நிறுவனங்கள் பங்கேற்பு

குன்றத்துார், திருமுடிவாக்கம் தொழிற்பேட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் குறு, சிறு நிறுவனங்களுக்கான மூன்று நாள் தொழிற்கண்காட்சி நேற்று துவங்கியது. இதில், 184 நிறுவனங்களின் உற்பத்தி பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.குன்றத்துாரை அடுத்த திருமுடிவாக்கத்தில் தொழிற்பேட்டை இயங்கி வருகிறது. இங்கு, 466 குறு, சிறு நிறுவனங்கள் இயங்கி வருகின்றன.

ரூ.300 கோடி

இந்த நிறுவனங்களில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களில் 60 சதவீதம் உள்நாட்டில் விற்பனையாகின்றன; 40 சதவீதம் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. ஆண்டுதோறும், 1,200 கோடி ரூபாய்க்கு வர்த்தகம் நடக்கிறது.இங்கு உற்பத்தியாகும் பொருட்களின் விற்பனையை அதிகரிக்கும் பொருட்டு, திருமுடிவாக்கம் தொழிற்பேட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில், ஆண்டுதோறும் தொழிற்கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. கடந்த 2019 கண்காட்சியில் 100 கோடி ரூபாய்க்கும், 2022ல் நடத்தப்பட்ட கண்காட்சியில் 300 கோடி ரூபாய்க்கும் வர்த்தகம் நடந்தது.இந்த நிலையில், மூன்றாவது ஆண்டாக, 'டெக்ஸ்போ- 2024' என்ற மூன்று நாள் தொழிற்கண்காட்சி, திருமுடிவாக்கத்தில் நேற்று துவங்கியது. காலை ௧௦:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை கண்காட்சி நடக்கிறது.கண்காட்சியை அமைச்சர் அன்பரசன் துவக்கி வைத்தார். காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

உற்பத்தி

திருமுடிவாக்கம் மட்டுமின்றி இருங்காட்டுக்கோட்டை, ஸ்ரீபெரும்புதுார், திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட இடங்களை சேர்ந்த 184 குறு, சிறு நிறுவனங்களும் பங்கேற்றுள்ளன.வாகன உதிரிபாகங்கள், ஆட்டோ மொபைல், தோல் பதனிடல், மருத்துவ உபகரணங்கள், இயந்திரங்கள், பிளாஸ்டிக், மின்மாற்றி உள்ளிட்ட உற்பத்தி பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.சென்னை, திருச்சி, ஸ்ரீபெரும்புதுார், காஞ்சிபுரம், திருவள்ளூர் பகுதிகளில் உள்ள பெரிய நிறுவனங்கள் மற்றும் அரசு சார்ந்த பொது நிறுவனங்கள் என, 80க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் கண்காட்சியை பார்வையிட்டு, கொள்முதல் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.இந்தாண்டு, 500 கோடி ரூபாய்க்கு வர்த்தகம் நடக்கும் என, திருமுடிவாக்கம் தொழிற்பேட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் எதிர்பார்க்கிறது.

மானியம்

முன்னதாக, கண்காட்சியை துவக்கி, அமைச்சர் அன்பரசன் பேசியதாவது:இந்த கண்காட்சி, 16,400 ச.அடியில், 184 அரங்குகளுடன் நடத்தப்படுகிறது. இதில், வாங்குவோர் - விற்போர் சந்திப்பும் நடக்கவுள்ளது. இந்த கண்காட்சியில் கலந்துகொள்ளும் அனைத்து குறு, சிறு நிறுவனங்களின் உற்பத்தியாளர்களுக்கும் அரசு மானியம் வழங்கப்பட உள்ளது.மூன்று ஆண்டுகளில், 288 நிறுவனங்களுக்கு 5.50 கோடி ரூபாய் மானியமாக வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் குறு, சிறு நிறுவனங்கள் உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் நடக்கும் கண்காட்சியில் கலந்துகொள்ளவும் அரசு நிதி உதவி அளித்து வருகிறது. இவ்வாறு அவர் பேசினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை