சென்னை, கோடை வெயில் சுட்டெரித்து, வெப்ப அலையும் வீசுவதால், பொதுமக்கள் மயக்கம், உடல் சோர்வு உள்ளிட்ட உடல் உபாதைகளால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.இந்த வெயில் நேரங்களில் செயற்கை பானங்களை அதிகம் அருந்த வேண்டாம் என, டாக்டர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.இந்நிலையில், தன்னார்வலர்கள், சில நிறுவனங்கள் சார்பில், கோடை வெயிலில் இருந்து மக்களை காப்பாற்றும் வகையில், குடிநீர், மோர், பழரசம் உள்ளிட்டவற்றை இலவசமாக வழங்கி வருகின்றனர்.இந்நிலையில், சென்னை மாநகராட்சி சார்பில், பொதுமக்களின் வசதிக்காக, குடிநீர் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:கோடை வெயிலில் பொதுமக்கள் தண்ணீருக்காக அவதிப்படுவதை தவிர்க்க, மாநகராட்சி சார்பில், மக்கள் கூடும் இடங்களில் குடிநீர் பந்தல் அமைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.இந்த குடிநீர் பந்தலை, அந்தந்த வார்டு உதவி பொறியாளர் மேற்பார்வையிடுகின்றனர்.இதனால், குடிநீர் காலியானவுடன், நீர் நிரப்பப்படும். இந்நீரை, 24 மணி நேரமும் பயன்படுத்தலாம். அத்துடன், சென்னை குடிநீர் வாரியம் சார்பில் சாலையோரம் வைக்கப்பட்டுள்ள, 8,000 குடிநீர் தொட்டிகளிலும், உடனுக்குடன் குடிநீர் நிரப்பப்பட்டு வருகிறது.இவ்வாறு அவர்கள் கூறினர்.