| ADDED : மார் 27, 2024 12:29 AM
செய்யூர், செங்கல்பட்டு மாவட்டம், பவுஞ்சூர் அருகே உள்ள வெங்கடாநகர் பகுதியை சேர்ந்த, 11ம் வகுப்பு மாணவர் பிரவின், 16. நேற்று முன்தினம், ஆண்டு பொதுத்தேர்வு முடிந்த நிலையில், நேற்று தன் பள்ளி நண்பர்களான முகமது முசாதிக் உள்ளிட்ட 12 பேருடன், செய்யூர் அடுத்த பனையூர்பெரியகுப்பம் கடற்கரைக்கு குளிக்கச் சென்றார்.நண்பர்களுடன் கடலில் குளித்துக் கொண்டு இருந்தபோது, எதிர்பாராதவிதமாக திடீரென ஏற்பட்ட ராட்சத அலையில் சிக்கி, பிரவின் மற்றும் முகமது முசாதிக் இருவரும், கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டனர்.இதைப் பார்த்த அவர்களது நண்பர்கள் கூச்சலிட்டதால், அருகே மீன் பிடித்துக்கொண்டு இருந்த மீனவர்கள், கடலில் இறங்கி மூழ்கியவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.சிறிது நேரத்திற்கு பின், கடலில் இழுத்துச் செல்லப்பட்ட இடத்தில் இருந்து, 200 மீட்டர் தொலைவில் இரண்டு பேரின் உடலும் கரை ஒதுங்கியது.தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற செய்யூர் போலீசார், இருவரின் உடல்களையும் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி, விசாரித்து வருகின்றனர்.