| ADDED : ஜூன் 22, 2024 12:09 AM
சென்னை, மலேஷியா, அபுதாபியில் இருந்து விமானத்தில் கடத்தி வரப்பட்ட, 2.66 கிலோ தங்கம், சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டது.மலேஷிய பெண் உட்பட இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர்.மலேஷியாவில் இருந்து சென்னை வந்த, 'இண்டிகோ ஏர்லைன்ஸ்' விமான பயணியரிடம் சுங்க அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது மலேஷியா பயணி ஒருவர் மறைத்து எடுத்து வந்த தங்க சங்கிலிகள், வளையல்கள் ஆகியவற்றை கைப்பற்றினர். அவரிடம் இருந்து 44.53 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 710 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.இதேபோல், மலேஷிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து வந்த மற்றொரு தனியார் விமானத்தில், பயணியரிடம் சோதனை நடத்தியபோது, அந்நாட்டைச் சேர்ந்த 35 வயது பெண் பயணியிடம் இருந்து, 56.38 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 900 கிராம் தங்க சங்கிலிகளை பறிமுதல் செய்தனர். அப்பெண் கைது செய்யப்பட்டார்.அபுதாபியில் இருந்து சென்னை வந்த, 'ஏர் அரேபியா ஏர்லைன்ஸ்' விமானத்தில் பயணி ஒருவர், 1 கிலோ 56 கிராம் எடையுள்ள தங்கப் பசை அடங்கிய நான்கு பார்சல்களை, விமான நிலைய சுங்கச் சோதனை பகுதியில் போட்டு விட்டு தலைமறைவானார். அந்த தங்கத்தின் மதிப்பு, 66.23 லட்சம் ரூபாய். அதை கடத்தி வந்த நபரை தேடி வருகின்றனர். இந்த சோதனையில், மொத்தம் 1.67 கோடி ரூபாய் மதிப்புள்ள 2.66 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. மலேஷியா பெண் உட்பட இரண்டு பேரை கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.