தி.நகர், கோடம்பாக்கம் மண்டலம், பாண்டி பஜார் 133வது வார்டு டாக்டர் நாயர் சாலையில், மாநகராட்சிக்குச் சொந்தமான வணிக வளாகம் உள்ளது.இதில் 38 கடைகள் உள்ளன. ஹோட்டல், டீ கடை, பழைய பட்டுப் புடவை கடை என, பல்வேறு கடைகள், மாத வாடகையில் இயங்கி வருகின்றன. கொரோனா காலத்தில் கடைகள் மூடப்பட்டு, அதன் பின் திறக்கப்பட்டன. இதனால், போதிய விற்பனை இல்லை என, உரிமையாளர்கள் வாடகை செலுத்தவில்லை. கடந்த 2020 முதல் தற்போது வரை வாடகை செலுத்தாத நிலையில், மொத்தமாக 90 லட்சம் ரூபாய் வாடகை பாக்கி உள்ளது. இதையடுத்து, மாநகராட்சி வருவாய்த் துறை சார்பில்,'நோட்டீஸ்' வழங்கப்பட்டது.ஆனாலும் வாடகை செலுத்தாததால், நேற்று காலை இந்த வணிக வளாகத்திலுள்ள 38 கடைகளுக்கு, மாநகராட்சி வருவாய்த் துறை அதிகாரிகள்,'சீல்' வைத்தனர்.தி.நகர் ரங்கநாதன் தெருவில் உள்ள சண்முகா ஸ்டோர், கடந்த 2019 முதல் சொத்து வரி செலுத்தாமல் உள்ளனர். இவர்கள், 30.59 லட்சம் ரூபாய் செலுத்த வேண்டியுள்ளது.இதேபோல், சரவணா ஸ்டோர்சுக்கு சொந்தமான கட்டடத்திற்கு, கடந்த 2020 முதல் சொத்து வரி செலுத்தப்படவில்லை. இவர்கள், 48 லட்சம் ரூபாய் செலுத்த வேண்டி உள்ளது. இதையடுத்து, இவ்விரு கடைகளுக்கும், மாநகராட்சி வருவாய்த் துறை அதிகாரிகள், நேற்று சீல் வைத்தனர். மாநகராட்சி வருவாய்த் துறை அதிகாரிகள் கூறியதாவது:சொத்து வரி மற்றும் மாநகராட்சி வணிக வளாகத்திலுள்ள கடைகளுக்கு வாடகை செலுத்தாத கடைகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.இதன்படி, தி.நகரில் கடைகளுக்கு, 'சீல்' வைக்கப்பட்டுள்ளது. பனகல் பூங்கா அருகே உள்ள மாநகராட்சி வணிக வளாகத்திலுள்ள 57 கடைகள், 2.15 கோடி ரூபாய் வாடகை செலுத்தாமல் உள்ளனர். இவர்களுக்கு 'நோட்டீஸ்' வழங்கப்பட்டுள்ளது. பாண்டி பஜார் வணிக வளாகத்திலுள்ள 625 கடைகள், 4.15 கோடி ரூபாய் வாடகை செலுத்தாமல் உள்ளனர். தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.