திருமங்கலம், அண்ணா நகர், தங்கம் காலனி 2வது தெருவைச் சேர்ந்தவர் சீனிவாசன், 45. இவரது மனைவி நதியா, 41; வழக்கறிஞர். இவர் பா.ஜ.,வில் மகளிர் அணி மாநில பொதுச்செயலராக உள்ளார்.சீனிவாசன் நேற்று முன்தினம் மாலை 4:00 மணியளவில், அண்ணா நகர் தங்கம் காலனி 6வது அவென்யூ வழியாக இருசக்கர வாகனத்தில் சென்றார். அப்போது, ஆட்டோவில் அரிவாளுடன் வந்த மர்ம கும்பல் அவரை வழிமறித்து, வெட்ட முயன்றது. அவர்களிடம் இருந்து தப்பியோடிய அவரை, விடாமல் துரத்திச் சென்று வெட்டி தப்பியது.அங்கிருந்தவர்கள் சீனிவாசனை மீட்டு, அண்ணா நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். பின், மேல் சிகிச்சைக்காக வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறார்.இதுகுறித்து, திருமங்கலம் போலீசார் விசாரித்தனர்.இந்த நிலையில், நேற்று அதிகாலை நொளம்பூர் காவல் நிலையத்தில், இந்த வழக்கு தொடர்பாக ஆறு பேர் சரணடைந்தனர். இதையடுத்து, ஆறு பேரும் திருமங்கலம் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். விசாரணையில், சரணடைந்தவர்கள் சவுகார்பேட்டையைச் சேர்ந்த பிரசாந்த், 28, மகேஷ் குமார், 40, நரேந்திரன், 30, ராஜேஷ், 38, கணேஷ் குமார், 40, உட்பட ஆறு பேர் என தெரியவந்தது. முன்விரோதமா?
கடந்த 2005ம் ஆண்டு சவுகார்பேட்டையில் நெடுஞ்செழியன் என்ற நபரை கொலை செய்த வழக்கில், சீனிவாசன் மற்றும் அவரது மாமனார் ராஜேந்திரன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.பின், நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டனர். தற்போது, சரணடைந்தவர்களில் பிரசாந்த் என்பவர், கொலை செய்யப்பட்ட நெடுஞ்செழியனின் நெருங்கிய உறவினர் என, போலீசார் தெரிவித்தனர்.எனவே, 19 ஆண்டுகள் பகைக்கு பழிதீர்ப்பதற்காக சீனிவாசனை கொலை செய்ய திட்டமிட்டார்களா அல்லது வேறு ஏதும் காரணமா என்ற கோணங்களில் போலீசார் விசாரிக்கின்றனர்.