பள்ளிக்கரணை, அரியலுாரைச் சேர்ந்தவர் ராஜசேகர், 35; ஐ.டி., நிறுவனங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் கார் ஓட்டி வருகிறார். இவர், சென்னை அடுத்த சிறுசேரி சிப்காட்டில் பணிபுரியும் ஐ.டி., நிறுவன ஊழியர்களை, பணி முடிந்து நேற்று முன்தினம் இரவு தன் காரில் ஏற்றினார்.பல்லாவரம், குரோம்பேட்டை பகுதியில் உள்ள ஊழியர்களின் வீடுகளில் அவர்களை இறக்கிவிட்டு, அலுவலகத்திற்கு திரும்பி கொண்டிருந்தார். அதிகாலை 2:00 மணிக்கு பள்ளிக்கரணை ரேடியல் சாலையில், ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த கார், நாராயணபுரம் ஏரியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.அதிகாலை 3:00 மணியளவில், ரேடியல் சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், நாராயணபுரம் ஏரியில் ஒரு கார் மிதப்பதைக் கண்டனர்.அப்போது, அவ்வழியாக வந்த ஜே.சி.பி., வாகனத்தின் உதவியுடன், காரை கரை கொண்டு வந்தனர். அப்போது, காரின் முன்பகுதியில் இருந்த ஓட்டுனர் ராஜசேகர் உயிருக்குப் போராடிய நிலையில் இருந்தார். அவரை மீட்ட போலீசார், '108' ஆம்புலன்ஸ் வாகனம் வாயிலாக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.காரின் பின் இருக்கையில் பயணித்த பீஹாரைச் சேர்ந்த கவுசல், 28, என்பவர் இறந்து கிடந்தார். இவர், ஐ.டி., பெண் ஊழியர்களின் பாதுகாப்பிற்காக நிறுவனம் சார்பில் அக்காரில் சென்றுள்ளார்.விபத்து குறித்து, பள்ளிக்கரணை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரிக்கின்றனர்.