| ADDED : ஜூலை 27, 2024 12:42 AM
சென்னை, வடகிழக்கு பருவமழை காலங்களில், சென்னையின் நீராதாரங்களில் ஒன்றான புழல் ஏரிக்கு நீர்வரத்து அதிகம் கிடைக்கிறது. உபரி நீர் வெளியேற்ற கால்வாய் அமைக்கப்பட்டு உள்ளது.புழல் ஏரி ஷட்டரில் துவங்கும் இந்த கால்வாய், 10 கி.மீ., பயணித்து, சடையங்குப்பம் அருகே வங்க கடலில் கலக்கிறது. கடந்தாண்டு மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட வெள்ளத்தால், உபரிநீர் கால்வாயின் கரையில் பல இடங்களில் உடைப்பு ஏற்பட்டது. இதனால், மாதவரம் நெடுஞ்சாலை மற்றும் குடியிருப்பு பகுதிகள் வெள்ளக்காடாகின.இப்பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில், கால்வாய் கரையை பலப்படுத்தும் பணி மற்றும் வெள்ள தடுப்புச் சுவர் கட்டுமான பணிகள், புழல் ஏரி ஷட்டர் அருகே 150 மீட்டர் மற்றும் வடபெரும்பாக்கம் தரைப்பாலம் 300 மீட்டர் துாரத்திற்கு நடந்து வருகிறது.இப்பணிகளுக்கு 20 கோடி ரூபாயை, சென்னை நிரந்தர வெள்ள தடுப்பு திட்டத்தின் கீழ் அரசு வழங்கியுள்ளது. கட்டுமான பணிக்கு எவ்வளவு கம்பிகள் பயன்படுத்த வேண்டும்; கான்கிரீட் எத்தகைய தரத்தில், எவ்வளவு உயரம் மற்றும் அகலத்திற்கு இருக்க வேண்டும் என, திட்ட மதிப்பீட்டில் தெளிவாக குறிப்பிடப்பட்டு உள்ளது. ஆனால், செலவை குறைக்கும் வகையில், கட்டுமான கம்பிகள் பயன்பாடு குறைக்கப்பட்டு உள்ளது.இரண்டு கம்பிகளுக்கு இடையே, மற்றொரு கம்பி மற்றும் வலையை வைத்து கட்டுமானம் செய்யாமல், நேரடியாக கான்கிரீட் ஊற்றப்பட்டு தடுப்பு சுவர் கட்டப்பட்டு வருகிறது. இதனால், விரைவில் அவை சேதம் அடைவதற்கான வாய்ப்புகள் உள்ளன. ஒப்பந்ததாரருடன் கூட்டணி அமைத்து, இந்த நுாதன முறைகேட்டில், நீர்வளத்துறை அதிகாரிகள் ஈடுபட்டு வருவதாக புகார் எழுந்துள்ளது. சென்னையில் நடந்துவரும் நிரந்தர வெள்ள தடுப்பு பணிகளை தலைமைசெயலர் சிவ்தாஸ் மீனா தலைமையிலான குழுவினர் ஆய்வு செய்து வருகின்றனர். புழல் ஏரி வெள்ள தடுப்புச் சுவர் கட்டுமான பணியையும், இக்குழு ஆய்வு செய்து அதன் தரத்தை உறுதி செய்ய வேண்டும் என, பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.***