| ADDED : ஜூலை 31, 2024 01:02 AM
மேடவாக்கம், மேடவாக்கத்தில், புதிதாக அமைக்கப்பட்ட சாலை, பல இடங்களில் பெயர்ந்து வருவதால், அதை மீண்டும் சீரமைக்க வேண்டுமென, கோரிக்கை எழுந்துள்ளது.பள்ளிக்கரணை அடுத்த மேடவாக்கத்தில் நீலா நகர், பாபு நகர், காயத்ரி நகர் ஆகிய பகுதியில் சாலைகள் படுமோசமாக இருந்ததால், புதிய சாலை அமைக்க, கடந்த 2022ல் கோரிக்கை வலுத்தது.இதனால், கடந்த ஆண்டு 55.75 லட்சம் ரூபாய் செலவில் சாலை அமைக்க நிதி ஒதுக்கப்பட்டு, நடப்பாண்டு ஜனவரியில் பணிகள் துவங்கி, ஒரு மாதத்தில் முடிக்கப்பட்டன.ஆனால், புதிய சாலை தரமற்று இருந்ததால், 10 நாட்களில் பல இடங்களில் பெயர்ந்து, பள்ளங்கள் உருவாகின. வாகன போக்குவரத்திற்கு லாயக்கற்றதாகவும் சாலை மாறத் துவங்கியது.தற்போது, 20க்கும் மேற்பட்ட இடத்தில் சாலை பெயர்ந்து, ஆங்காங்கு பள்ளங்கள் உருவாகி உள்ளன. இந்த பள்ளங்களில் மழைநீர் தேங்குவதால், சிறு பள்ளம் பெரிய பள்ளமாக மாறி வருகிறது.எனவே, சிதறி வரும் சாலையை சீரமைக்க, சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.