உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / கண்ணுக்கு தெரியாத வேகத்தடைகள் விதிமுறை பின்பற்றாததால் விபத்து அபாயம்

கண்ணுக்கு தெரியாத வேகத்தடைகள் விதிமுறை பின்பற்றாததால் விபத்து அபாயம்

சென்னை:சென்னையில் பெரும்பாலான இடங்களில், வேகத்தடைகள் விதிகளின் படி அமைக்கப்படாததால் அடிக்கடி விபத்துகள் அரங்கேறி வருகின்றன. அதேபோல, சில இடங்களில் உயிர்களை காவு வாங்கிய சம்பவங்களும் நடந்துள்ளன. சென்னையை பொறுத்தவரை 14 மண்டலங்களிலும் இந்த நிலைமை தொடர்கிறது. குறிப்பாக, உட்புற சாலைகளின் நிலைமை தான் படுமோசமாக உள்ளது.குறிப்பாக, நெசப்பாக்கம் அடுத்த ஏரிக்கரை சாலை, கோயம்பேடு நெற்குன்றம் பகுதி, எண்ணுார், மணலி, திருவொற்றியூர், பெரம்பூர் ரயில் நிலையம் எதிரே நெல்வயல் சாலை, பாரதி சாலை, ராமகிருஷ்ண சாலை, குமாரசாமி தெரு, படேல் சாலை, வடிவேலு பிரதான சாலை, ஆனந்த வேலு தெரு உள்ளிட்ட பல பகுதிகளில் வேகத்தடைகள் அமைக்கப்பட்டுள்ளன.ஆனால், பல இடங்களில் வேகத்தடை இருப்பதே தெரியாத அளவிற்கு உள்ளது. வேகத்தடைகளை வாகன ஓட்டிகள் எளிதில் அடையாளம் காணும் வகையில், வர்ணம் பூசப்படாமல் உள்ளதால், இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் நிலைமை உள்ளது. அதேபோல், விதிப்படி சரியான அளவில் வேகத்தடை அமைக்கப்படாததால் வாகனங்களும் சேதமடையும் நிலை உள்ளது.இதுகுறித்து பெரம்பூர் சுற்றுவட்டார வளர்ச்சி குழுமத்தைச் சேர்ந்த ரகுகுமார், சூடாமணி உள்ளிட்டோர் கூறியதாவது:வேகத்தடைகள் அதற்கான விதிகளின்படி அமைக்கப்படுவதில்லை. இந்தியா முழுமைக்குமான வேகத்தடை குறித்த கட்டுப்பாடுகளை, 'தி இந்தியன் ரோட்ஸ் காங்கிரஸ்' என்ற அமைப்பு முடிவு செய்கிறது.இதிலுள்ள, போக்குவரத்து பொறியாளர்கள் குழு கூடி, விதிமுறைகளை வரையறுக்கின்றனர். நகரப் பகுதிகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் இருக்கும் தெருக்களில், வாகனங்களின் வேகத்தை கட்டுப்படுத்தும் விதமாக, வேகத்தடைகள் அமைக்க வேண்டும்.ஓட்டுனர்களின் கவனத்துக்கு தெரியும்படி, இதற்கான எச்சரிக்கை அறிவிப்புகள் அமைக்கப்பட வேண்டும். சாதாரண வாகன போக்குவரத்து உள்ள சாலைகளில், வேகத்தை மணிக்கு 25 கி.மீ., அளவுக்கு குறைக்க, 3.7 மீ., நீளத்துக்கு, 10 செ.மீ., உயரத்துக்கு வேகத்தடை அமைக்கப்பட வேண்டும்.டிரக்குகள், பேருந்துகள், பெரிய 'வீல் பேஸ்' கொண்டிருப்பதால், வேகத்தடைகளை கடப்பது சிரமம் என உணரப்பட்டு, 1.5 மீ., கொண்ட நீளமான தடைகள் அமைக்க பரிந்துரைக்கப்பட்டது. சில இடங்களில், வாகன வேகத்தை முழுதுமாக குறைக்கும் நோக்கில், 100 மீ., அல்லது 120 மீ., பகுதிக்குள், குறிப்பிட்ட இடைவெளியில் நான்கு வேகத்தடைகளும் அமைக்கலாம்.'டி' அமைப்பில் இணையும் சாலைகள், ரயில் பாதைகள் குறுக்கே வரும் இடங்களில், வளைவான சாலைகளில், வேகத்தடைகள் அமைக்கப்பட வேண்டும்; பாலங்களில் வேகத்தடைகள் அமைக்கக் கூடாது.ஆனால், குறிப்பிட்ட பகுதியை சேர்ந்த ஒரு குழுவோ அல்லது நபரோ பரிந்துரைத்தால், வேகத்தடைகளை அவர்கள் விருப்பப்படி அமைத்து விடுகின்றனர். பெரும்பாலான வேகத்தடைகளில் வர்ணம் பூசாதது விபத்துக்கு முக்கிய காரணமாகிறது.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ