காஞ்சிபுரம், காஞ்சிபுரத்தில் கூட்டுறவுத் துறை, போலீசார், அ.தி.மு.க., - தி.மு.க., என பல்வேறு அமைப்பினரும் தண்ணீர் பந்தல் திறந்து, வாகன ஓட்டிகள், பாதசாரிகளுக்கு தண்ணீர் வழங்கி வருகின்றனர்.இதன் தொடர்ச்சியாக, காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் அருகே, அ.தி.மு.க., சார்பில், தண்ணீர் பந்தல் திறப்பு நிகழ்ச்சி நேற்று நடந்தது.இதில், அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் வளர்மதி, அமைப்பு செயலர் கணேசன், மாவட்ட செயலர் சோமசுந்தரம் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.தண்ணீர் பந்தல் மட்டுமல்லாமல், பொதுமக்களுக்கு வழங்குவதற்காக, சாத்துக்குடி, மாம்பழம், தர்பூசணி, வெள்ளரிப்பழம், மோர், ஐஸ்கிரீம், சோடா போன்ற பல்வேறு பழங்களையும், பானங்களையும் வண்டி வண்டியாக குவித்து வைத்திருந்தனர்.தண்ணீர் பந்தல் திறப்பு நிகழ்ச்சி முடிந்தவுடன், அ.தி.மு.க., நிர்வாகிகள் கொடுப்பதற்கு முன்னதாகவே, முண்டியடித்து அனைத்து பழங்களையும், பொதுமக்கள் கைகளிலும், பைகளிலும் அள்ளிச் சென்றனர்.மொத்தம் 10க்கும் மேற்பட்ட வண்டிகளில் குவிக்கப்பட்டிருந்த பழங்கள், நிகழ்ச்சி முடிந்த சில நிமிடங்களில் காலியாகின.
பெயரை சின்னதாக போட்டதால் அடிதடி
சென்னை, ஓட்டேரியில் அ.தி.மு.க., சார்பில் நேற்று, தண்ணீர் பந்தல் திறப்பு நிகழ்ச்சி நடந்தது. இதற்காக பேனர் வைக்கப்பட்டது. இதில், அ.தி.மு.க,வைச் சேர்ந்த வடசென்னை தெற்கு கிழக்கு இளைஞரணி துணை செயலர் பிரகாஷ், 30, என்பவரின் பெயர், சிறியதாக போடப்பட்டிருந்தது.இதில் அதிருப்தியடைந்த பிரகாஷ், பேனர் வைக்க ஏற்பாடு செய்த, அதே பகுதி மேட்டுபாளையத்தைச் சேர்ந்த பக்தவத்சலத்தை தலையில் அடித்துள்ளார். இதில் காயமடைந்த அவர், கீழ்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். இதுகுறித்து ஓட்டேரி காவல்நிலையத்தில் பக்தவத்சலம் புகார் அளித்தார். இருதரப்பினரையும் போலீசார் பேச்சு நடத்திய பின், இருவரும் சமாதானமாக சென்றனர்.