அமைந்தகரை, அண்ணா நகர் மண்டலம், அமைந்தகரை என்.எஸ்.கே., சாலையில், சென்னை மாவட்டத்தின் ஒருங்கிணைந்த குழந்தைகள் மையம் செயல்படுகிறது.இந்த மையத்தின் அருகில், சென்னை மாநகராட்சியின் பராமரிப்பில், சிறுவர் விளையாட்டு திடல் உள்ளது.முறையான பராமரிப்பு பணி மேற்கொள்ளப்படாததால், சில ஆண்டுகளுக்கு முன் விளையாட்டு திடல் மூடப்பட்டது. தற்போது, இங்கு விளையாட்டு திடல் இருப்பதே தெரியாத அளவிற்கு, சாலையோர ஆக்கிரமிப்பு கடைகள் அதிகரித்துள்ளன. இதுகுறித்து, அப்பகுதி சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:அண்ணா நகர் மண்டலத்தில், விளையாட்டு திடல்கள் மற்றும் கழிப்பறைகளை முறையாக பராமரிப்பது கிடையாது. விளையாட்டு திடல்களில் மாடுகளை கட்டி வைப்பது உள்ளிட்ட ஆக்கிரமிப்புகள் உள்ளன.அண்ணா நகர் மூன்றாவது அவென்யூ, என்.எஸ்.கே., சாலையிலுள்ள விளையாட்டு திடல் மூடப்பட்ட நிலையில், இங்கு சாலையோர ஆக்கிரமிப்புகள் அதிகரித்துள்ளன.இந்த விளையாட்டு திடலை, சுற்றுவட்டார மக்கள் காலை மற்றும் மாலை நேரங்களில் பயன்படுத்தி வந்தனர். அருகில் உள்ள அங்கன்வாடி மையத்தில் இருந்து குழந்தைகள் வந்து, இங்கு விளையாடினர்.இந்நிலையில், இந்த விளையாட்டு திடலை, அப்பகுதியில் உள்ள அரசியல் கட்சியினர் மூடி, ஆக்கிரமிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும், மாநக ராட்சி அதிகாரிகள் அலட்சியமாக இருப்பது, ஆக்கிரமிப்பாளருக்கு தாரைவார்க்க திட்டமிட்டிருப்பதாக தெரிகிறது. எனவே, இந்த விளையாட்டு திடலை கண்காணித்து, பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.