திருவொற்றியூர், சென்னை, பூந்தமல்லியில் நேற்று மாலை புறப்பட்ட தடம் எண்: 101 மாநகர பேருந்து, திருவொற்றியூர் நோக்கி சென்று கொண்டிருந்தது.வழியில், மெரினா கடற்கரை நிறுத்தத்தில் இருந்து, கல்லுாரி மாணவர்கள் 11 பேர் பேருந்தில் ஏறியுள்ளனர். அவர்கள், ஆபாச பாடல்கள் பாடியபடி, தாளம் போட்டுள்ளனர்.ஓட்டுனர் பிரபாகரன், மாணவர்களை கண்டித்துள்ளார். இதில் ஆத்திரமடைந்த அவர்கள், ஓட்டுனரிடம் வாக்குவாதம் செய்ததோடு, மறைத்து வைத்திருந்த பட்டாக்கத்திகளை காட்டி, அவரை மிரட்டியுள்ளனர்.ஆயுதங்களுடன் மாணவர்கள் பயணிப்பதை பார்த்து, பயணியர் பீதியடைந்தனர். இது குறித்து, காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் அளித்தனர்.அங்கிருந்து, திருவொற்றியூர் போலீசார் தகவல் அளிக்கப்பட்டது. கடைசி நிறுத்தமான திருவொற்றியூருக்கு பேருந்து வரும் முன், போலீசார் அங்கு சென்றனர். பேருந்து வந்ததும், தயாராக இருந்த ஐந்துக்கும் மேற்பட்ட போலீசார், '101' பேருந்தை சுற்றி வளைத்தனர்.பயணியரை பத்திரமாக இறக்கிவிட்ட போலீசார், பட்டாக்கத்திகளுடன் அட்டகாசம் செய்த மாணவர்களை தப்பிச்செல்ல விடாமல் மடக்கிப் பிடித்தனர். 11 மாணவர்களையும், அதே பேருந்தில் அடைத்தனர்.இதையடுத்து, மாணவர்களை சோதனை செய்தனர். அவர்களது பையில், 2 அடியில் ஒரு கத்தியும், 1.5 அடியில் ஒரு கத்தியும் என, இரண்டு கத்திகள் இருந்தன. அவற்றை பறிமுதல் செய்த போலீசார், அவர்களை காவல் நிலையம் அழைத்துச் சென்றனர்.பிடிபட்டவர்களில், மாநிலக் கல்லுாரி மாணவர்களான மோகனகிருஷ்ணன், 20, இஸ்மத், 20, குணசேகரன், 19, பிரதீப், 19, மற்றும் பொன்னேரி மற்றும் மீஞ்சூரில் செயல்படும் தனியார் கல்லுாரி மாணவர்களான விஜய்சந்தோஷ், 20, நீரஜ், 19, மற்றும் 17 - 18 வயதுடைய ஐந்து பேர் என்பது தெரியவந்தது.நேற்று, மோகனகிருஷ்ணனுக்கு பிறந்தநாள் என்பதால், மெரினாவில் கேக் வெட்டி கொண்டாடியதும், வீடு திரும்பும் வழியில் பேருந்தில் பட்டாக்கத்திகளுடன் அட்டகாசம் செய்ததும் தெரிந்தது. போலீசார், 11 மாணவர்களை கைது செய்தனர்.