உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / பா.ஜ., எச்.ராஜா குற்றச்சாட்டு மெட்ரோ ரயில் நிறுவனம் விளக்கம்

பா.ஜ., எச்.ராஜா குற்றச்சாட்டு மெட்ரோ ரயில் நிறுவனம் விளக்கம்

சென்னை, 'சென்னை ஒயிட்ஸ் ரோடில், இரண்டு கோவில்களை, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் ,தேவையில்லாமல் இடித்து வருவதாக, தமிழக பா.ஜ., மூத்த தலைவர் எச்.ராஜா கூறியுள்ள குற்றச்சாட்டு தவறானது' என, மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.சென்னை, ராயப்பேட்டை, ஒயிட்ஸ் சாலையில் உள்ள ரத்தின விநாயகர் கோவிலுக்கு பா.ஜ., மூத்த தலைவர் எச்.ராஜா வந்தார். பின், ''1895ல் கட்டப்பட்ட இந்த பழமையான கோவிலை அகற்றுவது, ஹிந்து பக்தர்களை புண்படுத்தியுள்ளது. இந்த கோவிலுக்கு ஏதேனும் சேதம் ஏற்பட்டால், ஹிந்து பக்தர்களுடன் இணைந்து போராட்டத்தில் ஈடுபடுவேன். இதேபோல், விருகம்பாக்கத்தில் உள்ள பழமையான சுந்தர வரதராஜ பெருமாள் கோவிலை அகற்ற, மெட்ரோ ரயில் நிர்வாகம் முடிவெடுத்தது. அங்குள்ள பக்தர்களுடன் இறங்கி போராடியபின்தான் அந்த முடிவு மாற்றப்பட்டது,'' என்றார். இது குறித்து மெட்ரோ ரயில் நிறுவனம் வெளியிட்ட அறிக்கை:சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் மற்றும் அதன் மூத்த அலுவலர்களுக்கு எதிராக, எச்.ராஜா சில தவறான மற்றும் தீங்கிழைக்கும் கருத்துக்களை தெரிவித்துள்ளார். சென்னை மேட்ரோ ரயில் திட்டத்தில், ஆயிரம் விளக்கு மெட்ரோ ரயில் நிலையம் அமைய உள்ள இடத்தில், துர்கை அம்மன் கோவில் மற்றும் ரத்ன விநாயகர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில்களை தேவையில்லாமல் இடித்து வருவதாக, அவர் கூறியிருப்பது தவறானது. அனைத்து சமூகத்தினரின் மத உணர்வுகளுக்கும், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், உரிய மதிப்பளித்து செயல்படுகிறது. திட்டத்தை தாமதமின்றி நிறைவு செய்யும் நோக்கத்துடன், சட்டப்பூர்வமான பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. பொதுமக்கள் பெரிதும் பயன்பெறும் திட்டத்தை செயல்படுத்தும்போது, கட்டடங்கள் மற்றும் கட்டமைப்புகளை மாற்றுவது, சில இடங்களில் இடமாற்றம் செய்வது தவிர்க்க முடியாதவை. இதில் மத நிறுவனங்களுக்கு சொந்தமான கட்டடங்களும் அடங்கும். இந்த நடவடிக்கைகள், எந்த மத சார்பும் இல்லாமல் செய்யப்படுகின்றன.கடந்த 2018 ல் அங்கீகரிக்கப்பட்ட விரிவான திட்ட அறிக்கையின்படி, இடித்தல் மற்றும் இடமாற்றம் செய்யப்பட வேண்டிய, சில கோவில்கள் பாதிக்கப்படாமல் இருக்க, சில பணிகளை மெட்ரோ ரயில் நிறுவனம் மாற்றி செயல்படுத்தி உள்ளது. ஒயிட்ஸ் ரோடில் அமைந்துள்ள, துர்கை அம்மன் கோவிலின், 15 ஆண்டுகள் பழமையான நுழைவு கோபுரம் மற்றும் ஸ்ரீ ரத்ன விநாயகர் கோவிலை இடமாற்றம் செய்வது, 2018 ம்ஆண்டு விரிவான திட்ட அறிக்கையை அடிப்படையாகக் கொண்டது. இந்த விவகாரம் தற்போது, சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ