| ADDED : ஜூன் 13, 2024 12:13 AM
சென்னை, : உலக ரத்த தான தினத்தை முன்னிட்டு, அப்பல்லோ மருத்துவமனை சார்பில், ரத்த தானம் செய்தவர்கள் கவுரவிக்கப்பட்டனர். ரத்த தானம் பெற்று, உயிர் பிழைத்தோர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்று நன்றி கூறினர்.நிகழ்ச்சியில் டாக்டர் தவபழனி பேசியதாவது:உலகிலேயே அவசர சிகிச்சையில், நம் நாடு தான் முன்னிலையில் உள்ளது. நம் நாட்டில் மற்ற உயிர்க்கொல்லி நோயில் இறந்தவர்களைவிட, விபத்தில் இறப்போர்தான் அதிகம். விபத்தில் தான் அதிகளவு ரத்தம் வெளியேறுவதும், உடனடியாக உடலுக்குள் ரத்தம் உறைவதும் நிகழ்கின்றன. விபத்தில் காயமடைந்தவர்களை ஆம்புலன்சில் அனுப்பி வைக்கும் போது, அதிலேயே ரத்தப்போக்கை கட்டுப்படுத்தும் மருத்துவம் செய்துவிடுவர்.பொதுவாக, தொடைப்பகுதி, இடுப்பு பகுதியில் ஏற்படும் உள் காயங்களால், 40 சதவீத ரத்தம் வெளியேறும். அவற்றை ஸ்கேன் வாயிலாக கண்டறிந்து, அறுவை சிகிச்சை வாயிலாக சரி செய்ய முடியும். அப்பல்லோவில் அதற்கான அனைத்து வசதிகளும் உள்ளது. ரத்தத்தில் உள்ள பிளாஸ்மா உள்ளிட்ட அனைத்தையும் தனித்தனியாக பிரித்து ரத்த வங்கியில் சேமிப்பதால், அவசர காலத்தில் எது தேவையோ அதை மட்டும் செலுத்தி காப்பாற்ற முடிகிறது. இதற்கு, தன்னலமற்ற மனநிலையில் ரத்த தானம் செய்தவர்களுக்குதான் நன்றி சொல்ல வேண்டும். ஒருவர் வழங்கும் ரத்தம் பலரை பிழைக்க வைக்கிறது. அதுதான் மரணத்தை தடுக்கும் முதல் கருவி. இவ்வாறு அவர் பேசினார்.இந்த நிகழ்ச்சியில்,அப்பல்லோ மருத்துவ சேவைகள் இயக்குனர் வெங்கடாசலம், நடிகர் அசோக்குமார் பாலகிருஷ்ணன், அப்பல்லோ ரத்த வங்கி ஆலோசகர் மதன் குமார் ஆகியோர் பங்கேற்றனர்.