உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / சென்னையை சுற்றியும் தொடரும் ரத்தக்களரி

சென்னையை சுற்றியும் தொடரும் ரத்தக்களரி

சென்னை, சென்னை மற்றும் புறநகரில் ஒரே இரவில் ஆட்டோ ஓட்டுனர், லாரி உரிமையாளர், மொபைல் போன் கடை ஊழியர் உட்பட ஆறு பேர் வெட்டிக் கொல்லப்பட்டனர். முன்விரோதம், ஆதாயம், பழிக்குப்பழி, வழிப்பறி உள்ளிட்டவற்றால் அரங்கேறிய இச்சம்பவம் மாநகரில் மீண்டும் மீண்டும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.சென்னை, குரோம்பேட்டை, நாகல்கேணி, டி.எஸ்.லட்சுமணன் நகரைச் சேர்ந்தவர் தாமஸ், 50; லாரி உரிமையாளர். இவரை, அதே பகுதியைச் சேர்ந்த சபரி, 30, என்பவர் நேற்று முன்தினம் இரவு, திருநீர்மலை சாலை, கருமாரியம்மன் கோவில் அருகே, கம்பியால் சரமாரியாக தாக்கினார். இதில், தாமஸ் சம்பவ இடத்திலேயே இறந்தார்.கொலை செய்த சபரி நேற்று முன்தினம் இரவு, குரோம்பேட்டை காவல் நிலையத்தில் சரணடைந்தார்.

பணத்தகராறில் கொலை

விசாரணையில் தெரிய வந்ததாவது:ஆறு மாதங்களுக்கு முன், எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் மலிவு விலையில் இருப்பதாகக் கூறி, தாமஸிடம் இருந்து, 28,000 ரூபாயை, சபரி வாங்கியுள்ளார். ஆனால், பொருட்களையும் தராமல், பணத்தையும் திருப்பி தராமல் ஏமாற்றியுள்ளார். சில நாட்களுக்கு முன், சபரியை சந்தித்த தாமஸ், பணத்தை கேட்டுள்ளார். ஒரு வாரத்தில் தருவதாக சபரி கூறியுள்ளார்.'பணத்தை தரவில்லை எனில், தாய் மற்றும் மனைவியை ஒரு வாரம், என்னுடன் அனுப்பி வை' என, தாமஸ், அவதுாறாக பேசியுள்ளார். இந்த ஆத்திரத்தில், நேற்று முன்தினம் இரவு, தாமஸிடம் சபரி தகராறு செய்துள்ளார். அப்போது, அப்பகுதியில் உள்ள மெக்கானிக் கடையில் இருந்து, கூர்மையான ஆயுதத்தை எடுத்து வந்து, தாமஸை சரமாரியாக தாக்கியதில், அவர் சம்பவ இடத்திலேயே இறந்தது தெரியவந்தது.

பழிக்குப்பழி கொலை

ஐ.சி.எப்., - டாக்டர் அம்பேத்கர் பகுதியைச் சேர்ந்த ரவுடி உதயகுமார், 30. ஜாமினில் வெளிவந்த இவர், 26ம் தேதி இரவு, வில்லிவாக்கம் எம்பார் நாயுடு பகுதியில் உள்ள 'டாஸ்மாக்' கடை அருகில் நண்பர்களுடன் மது அருந்தினார்.அப்போது, பைக்கில் வந்த மூன்று பேர் கும்பலால், உதயகுமார் படுகொலை செய்யப்பட்டார்.வில்லிவாக்கத்தில் கஞ்சா வியாபாரியாக வலம் வந்த ரவுடி டபுள் ரஞ்சித் என்பவரை, 2022ல் நியூ ஆவடி சாலையில் பட்டப்பகலில், தொழில் போட்டியில் ஏற்பட்ட தகராறு காரணமாக கூட்டாளிகளுடன் சேர்ந்து, உதயகுமார் வெட்டி கொலை செய்தார். இந்த வழக்கில், உதயகுமார் உட்பட எட்டு பேர் கைது செய்யப்பட்டனர். ஜாமினில் வெளிவந்த உதயகுமாரை, டபுள் ரஞ்சித் நண்பரான, வில்லிவாக்கம் எம்பார் நாயுடு தெருவைச் சேர்ந்த அலெக்சாண்டர், 29, வெட்டிக் கொன்றது தெரியவந்தது.வில்லிவாக்கத்தில் பதுங்கி இருந்த, அலெக்சாண்டர் மற்றும் அவரது கூட்டாளியான தினேஷ், 28, ஆகியோரை, நேற்று போலீசார் கைது செய்தனர். அலெக்சாண்டர் கும்பலை சேர்ந்த மேலும் 10 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

நகைக்காக கொலை

வாலாஜாபாத் அடுத்த கட்டவாக்கத்தைச் சேர்ந்தவர் சுகுணா, 65. வீட்டின் மாடியில் தனியாக வசித்து வந்தார். கீழ் வீட்டில் வட மாநிலத்தவர்கள் வாடகைக்கு உள்ளனர். சுகுணாவின் மகள் திருமணமாகி, திருநின்றவூரில் வசிக்கிறார். வழக்கம்போல, அம்மாவிடம் மொபைல் போனில் பேச பலமுறை தொடர்பு கொண்டும், சுகுணா போனை எடுக்கவில்லை.இதையடுத்து சுகுணாவின் உறவினர்கள் வீட்டிற்கு சென்று பார்த்தபோது, வீட்டின் கதவு வெளியே பூட்டப்பட்டிருந்தது. மூதாட்டி சுகுணா உள்ளே படுத்திருந்தார்.பூட்டை உடைத்து, கதவைத் திறந்து உள்ளே சென்று பார்த்தபோது, மூதாட்டி கழுத்து மற்றும் முகத்தில் சிறு காயங்களுடன் இறந்து கிடந்தார். அவர் அணிந்திருந்த 10 சவரன் நகைகள் கொள்ளை போனது தெரியவந்தது. இது குறித்து வாலாஜாபாத் போலீசார் விசாரிக்கின்றனர்.

தீர்த்துக்கட்டிய 'தலைவர்'

தாம்பரத்தை அடுத்த இரும்புலியூரைச் சேர்ந்தவர் கார்த்திக் ராஜா, 26. ஆட்டோ ஓட்டுனர். ரவுடியாக வலம் வந்த கார்த்திக் ராஜாவுக்கு, ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்துள்ளது. இவரது மனைவி மகா.திருமணத்திற்கு பின் திருந்திய கார்த்திக் ராஜா, ஆட்டோ ஓட்டுனராக வேலை செய்து வந்துள்ளார். எந்த ஆட்டோ ஸ்டாண்டிலும் சேராமல், தன்னிச்சையாக ஓட்டி வந்துள்ளார். இதனால், ஆட்டோ ஓட்டுனர் சங்க தலைவர் ஆனந்தன் என்பவருக்கும், இவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு, பேருந்து நிலையத்தில் சவாரிக்காக நின்றிருந்த கார்த்திக் ராஜாவை, ஆனந்தன் உள்ளிட்ட ஐந்து பேர் சேர்ந்து, சரமாரியாக வெட்டினர். மருத்துவமனைக்கு துாக்கி செல்லும் வழியில் இறந்தார். நேற்று மதியம், ஆனந்தன் உள்ளிட்ட ஐந்து பேர், தாம்பரம் காவல் நிலையத்தில் சரணடைந்தனர். அவர்களை போலீசார் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

வாலிபர் வெட்டிக் கொலை

விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ராஜேஷ், 30. மொபைல் போன் கடையில் பணியாற்றி வருகிறார். இவருக்கு மனைவி மற்றும் இரு குழந்தைகள் உள்ளனர். ராஜேஷின் தாய், தந்தை குன்றத்துார் அருகே, செங்கல் சூளையில் தங்கி வேலை பார்க்கின்றனர்.பெற்றோரை பார்ப்பதற்காக ராஜேஷ், குடும்பத்துடன் குன்றத்துார் அருகே உள்ள செங்கல் சூளைக்கு வந்திருந்தார். இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு செங்கல் சூளை அருகே உள்ள பிரதான சாலையில், ராஜேஷ் தனியாக நடந்து சென்றார். அப்போது அங்கு ஒரே பைக்கில் வந்த மூவர், ராஜேஷை மடக்கி கத்தி முனையில் பணம் கேட்டனர். 'பணம் இல்லை' என ராஜேஷ் கூறியதால், ஆத்திரமடைந்தவர்கள், ராஜேஷை கண்மூடித்தனமாக சரமாரியாக வெட்டி, மொபைல் போனை பறித்துச் சென்றனர்.படுகாயம் அடைந்த ராஜேஷை, அப்பகுதியில் சென்றோர் மீட்டு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று காலை ராஜேஷ் உயிரிழந்தார். கொலையாளிகளை குன்றத்துார் போலீசார் தேடி வருகின்றனர்.

'மடக்கிய' மாமன் குத்திக்கொலை

மதுராந்தகம் அருகே கக்கிலப்பேட்டை, ஆதிவாசி நகரைச் சேர்ந்தவர் தங்கராஜ் 37. இவரது மனைவி செல்வி 29. இவர்களுடன் செல்வியின் தம்பி கார்த்திக் 25 மற்றும் அவரது உறவினர்களான கவிதா, 19, உள்ளிட்ட எட்டு பேர், செய்யூர் அடுத்த வெடால் கிராமத்தில் உள்ள தனியார் ரைஸ் மில்லில், கடந்த 20 நாட்களாக வேலை செய்து வருகின்றனர். கார்த்திக் மற்றும் கவிதா இருவரும், மூன்று ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். சில மாதங்களில் திருமணம் செய்ய இருந்தனர். இந்த நிலையில், கவிதாவுடன் தங்கராஜ் பழகி வந்துள்ளார். இதுகுறித்து, கார்த்திக் உட்பட குடும்பத்தினர் அனைவரும் கண்டித்துள்ளனர்.எதையும் பொருட்படுத்தாத தங்கராஜ், தொடர்ந்து கவிதாவுடன் பழகி வந்துள்ளார். நேற்று முன்தினம் இரவு 9:00 மணிக்கு தங்கராஜ் மற்றும் கார்த்திக் ஆகிய இருவரும் மது அருந்தி உள்ளனர். அப்போது, கவிதா தொடர்பாக எழுந்த தகராறில் தங்கராஜை கார்த்திக் சரமாரியாக குத்திக்கொலை செய்தார். கார்த்திக்கை கைது செய்து செய்யூர் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி