உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / சென்னை கடற்கரை - எழும்பூர் 4வது புது ரயில் பாதை பணி தாமதம் ஜூன் மாதம் திறக்கப்படுவதாக அதிகாரிகள் தகவல்

சென்னை கடற்கரை - எழும்பூர் 4வது புது ரயில் பாதை பணி தாமதம் ஜூன் மாதம் திறக்கப்படுவதாக அதிகாரிகள் தகவல்

சென்னை, சென்னை கடற்கரை - எழும்பூர் இடையே, 4வது புதிய ரயில் பாதை பணிகள் ஏற்கனவே திட்டமிட்டப்படி முடியாததால், கடற்கரை - வேளச்சேரி மேம்பால தடத்தில் மீண்டும் ரயில் சேவை துவங்குவதில் தாமதம் ஏற்பட்டு உள்ளது. சென்னை கடற்கரை -- வேளச்சேரி மேம்பால வழித்தடம் முக்கியமான வழித்தடத்தில் ஒன்றாக இருக்கிறது. இந்த வழித்தடத்தில் உள்ள ரயில் நிலையங்களை ஒட்டி அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள், ஐ.டி., நிறுவனங்கள் அதிகளவில் இருப்பதால், காலை மற்றும் மாலை நேரங்களில் பயணியர் கூட்டம் அதிகமாக இருக்கும்.சென்னை கடற்கரை -- எழும்பூர் இடையே, 4.2 கி.மீ., துாரத்திற்கு 4வது புதிய பாதை அமைக்கும் பணி காரணமாக, கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் கடற்கரை முதல் சிந்தாதிரிப்பேட்டை வரை ரயில் சேவை நிறுத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து, சிந்தாதிரிப்பேட்டை -- வேளச்சேரி இடையே ரயில் சேவை இயக்கப்படுகிறது. இதனால், பயணியர் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.எழும்பூர் -- கடற்கரை 4வது பாதைக்கான பணிகளை, கடந்த மார்ச் மாதத்திற்குள் முடித்து, கடற்கரை -- வேளச்சேரி இடையே மீண்டும் ரயில் சேவை துவங்கும் என, சென்னை ரயில் கோட்டம் அறிவித்தது. ஆனால், தற்போது 70 சதவீத பணிகளே முடிந்துள்ளதால், இந்த பணிகளை முடிக்க மேலும் தாமதம் ஏற்பட வாய்ப்பு உள்ளது.இதுகுறித்து, ரயில் பயணியர் கூறியதாவது:கடற்கரை -- சிந்தாதிரிப்பேட்டை இடையே ரயில் சேவை நிறுத்தப்பட்டதால், பல்லாயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.வேளச்சேரிக்கு சென்று திரும்புவதற்குள் பயணியர் மிகுந்த சிரமத்தை சந்திக்க வேண்டியுள்ளது. சிந்தாதிரிப்பேட்டையில் இருந்து சென்ட்ரல், கடற்கரை ரயில் நிலையத்துக்கு செல்ல போதிய பேருந்து வசதிகளும் இல்லை.இதனால், பயணியர் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே, கடற்கரை -- சிந்தாதிரிப்பேட்டை ரயில் சேவையை மீண்டும் துவக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.இதுகுறித்து, சென்னை ரயில்வே கோட்ட அதிகாரிகள் கூறியதாவது:சென்னை கடற்கரை -- எழும்பூர் இடையே 4வது புதிய பாதைக்கான தடுப்புகள் அகற்றப்பட்டு, பாதை அமைப்பதற்கான பணிகள் நடைபெறுகின்றன.அதேபோல கோட்டை, பூங்கா ஆகிய நிலையங்களில், ஏற்கனவே இருந்த நடைமேம்பால ரயில் பாதைகள் அகற்றப்பட்டு, கூடுதல் நடைமேடைகள் மற்றும் கூரைகள் அமைக்கும் பணிகள் நடைபெறுகின்றன.அடுத்தகட்டமாக, ரயில் பாதை அமைக்கும் பணிகள் நடைபெறும். 70 சதவீத பணி வரை முடிந்துள்ளன. அனைத்து பணிகளும் ஜூலைக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதன்பின், கடற்கரை -- வேளச்சேரிக்கு மீண்டும் மின்சார ரயில்கள் இயக்கப்படும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Vijayakumar Somasundaram
மே 12, 2024 21:27

முதலில் பீச் முதல் பார்க் டவுன் வரையாவது வேலை முடித்து வேளச்சேரி ரூட்டை துவக்கினால் மிகவும் நல்லா இருக்கும்


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை