| ADDED : மே 12, 2024 12:07 AM
சென்னை, உலக ரோலர் ஸ்கேட்டிங் சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்கும் இந்திய அணியில், சென்னை மாணவர் இடம் பிடித்து உள்ளார்.உலக ரோலர் ஸ்கேட்டிங் சாம்பியன்ஷிப் போட்டி, வேர்ல்டு ஸ்கேட்டிங் பெடரேஷன் சார்பில் வரும் செப்டம்பரில், இத்தாலி நாட்டில் நடக்கிறது.இதில், இந்தியா அணியில் சார்பில் பங்கேற்கும் வீரர்களின் தகுதி தேர்வு, சமீபத்தில் சண்டிகரில் ரோலர் ஸ்கேட்டிங் பெடரேஷன் ஆப் இந்தியா சார்பில் நடந்தது.அதில், வேதாந்தா அகாடமி பள்ளி பிளஸ் 2 மாணவரான, சென்னை, வானகரத்தை சேர்ந்த பென் ஷிராஜ், 16, என்பவர் தேர்வாகிஉள்ளார்.இவர், 19 வயதுக்கு உட்பட்ட ஜூனியரில் 'இன்லைன் பிரிஸ்டைல்' பிரிவுக்கான போட்டியில் பங்கேற்கிறார். இந்திய அணிக்கு தேர்வாகிய பென் ஷிராஜுக்கு, அவரது பயிற்சியாளர் சத்யா, வேதாந்தா அகாடமியின் இயக்குனர் சந்தீப் வாசு உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்தனர்.இது குறித்து, பென் ஷிராஜ் கூறியதாவது:இந்திய அணிக்காக விளையாடுவது என் நீண்ட நாள் கனவு; தற்போது நிறைவேறி உள்ளது. இதற்கு உறுதுணையாக இருந்த பெற்றோர் மற்றும் பயிற்சியாளர்கள் அனைவருக்கும் நன்றி.போட்டியில் பதக்கம் வென்று, நிச்சயம் இந்தியாவிற்கு பெருமை சேர்ப்பேன். இதைத்தொடர்ந்து, ஆசிய மற்றும் உலக கோப்பை போட்டியிலும் பங்கேற்க தகுதி பெறுவேன்.இவ்வாறு அவர் கூறினார்.இந்தியாவிற்காக பெருமை சேர்க்க உள்ள நடுத்தர குடும்பத்தை சேர்ந்த சிறுவன், போட்டியில் பங்கேற்க குறைந்த பட்சம் 5 லட்சம் ரூபாய் வரை தேவைப்படுவதால், உதவி செய்ய விரும்புவோர், 88073 45048 என்ற எண்ணில் தொடர்புக் கொள்ளலாம்.