சென்னை:சென்னை மாநகராட்சியில், 200 கோட்டங்களிலும், ஏழு அரசு மருத்துவமனைகளிலும், அ.தி.மு.க., ஆட்சியில், 388 அம்மா உணவகங்கள் துவக்கப்பட்டன. அவை தொடர்ந்து செயல்பட்டு வருகின்றன. இவற்றில் தினசரி சராசரியாக, 1.05 லட்சம் பயனாளிகள் உணவு அருந்துகின்றனர். இவற்றுக்கு தேவைப்படும் அரிசி மற்றும் கோதுமையை, மானிய விலையில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் வழங்குகிறது. மளிகைப் பொருட்கள், காய்கறிகள், காஸ் சிலிண்டர் போன்றவை திருவல்லிக்கேணி நகரக் கூட்டுறவு சங்கம் வழியாக பெறப்படுகின்றன. ஆவின் நிறுவனத்திடம் தயிர் வாங்கப்படுகிறது.உணவகங்களில் பணிபுரியும் மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்களுக்கு, தினசரி 300 ரூபாய் அளிக்கப்படுகிறது. இதற்காக கடந்த மூன்று ஆண்டுகளில் 148.4 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. மற்ற செலவுகளுக்கு, 2021 மே முதல் இதுவரை, சென்னை மாநகராட்சி சார்பில் 400 கோடி ரூபாய், அரிசி மற்றும் கோதுமைக்கு தமிழக அரசின் மானியமாக 69 கோடி ரூபாய் என, மொத்தமாக 469 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.நேற்று சென்னை மாநகராட்சி 122வது வார்டில், தேனாம்பேட்டை பகுதியில் செயல்படும் அம்மா உணவகத்தை, முதல்வர் ஸ்டாலின் நேரில் பார்வையிட்டார். உணவின் தரத்தை சோதனை செய்தார். அங்கு சாப்பிட வந்தவர்களுடன் உரையாடினார். அப்போது, பல்வேறு அம்மா உணவகங்களில் பாத்திரங்கள் மற்றும் சமையல் கருவிகள் பழுதடைந்திருப்பதாக, முதல்வரிடம் தெரிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, அவற்றை மாற்றி புதிய பாத்திரங்கள் மற்றும் கருவிகளை, 7 கோடி ரூபாய் செலவில் வழங்கவும், மேலும் 14 கோடி ரூபாயில், உணவகங்களை புனரமைக்கவும், முதல்வர் உத்தரவிட்டார்.தங்கள் பகுதிகளில் உள்ள அம்மா உணவகங்களுக்கு, அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் நேரில் ஆய்வு செய்து, தேவையான உதவிகளை செய்யவும் முதல்வர் அறிவுறுத்தி உள்ளார்.