சென்னை: இந்திய தண்டனை சட்டம், குற்றவியல் நடைமுறை சட்டம், இந்திய சாட்சிகள் சட்டத்தின் பெயர்களையும், சட்ட பிரிவுகளிலும், தண்டனையிலும் மாற்றம் செய்து, மத்திய அரசு திருத்தம் கொண்டு வந்துள்ளது. இதற்கு மாற்றாக, 'பாரதிய நகரிக் சுரக்ஷா சன்ஹிதா, பாரதிய நியாய சன்ஹிதா, பாரதிய சாக்ஷிய அதினியம்' என்ற பெயர்களில் புதிய சட்டங்கள் நிறைவேற்றப்பட்டு, ஜூலை 1 முதல் அமலுக்கு வந்துள்ளன.இந்த சட்டங்களை அரசியலமைப்புக்கு விரோதமானது என அறிவித்து, அவற்றை ரத்து செய்ய கோரி, தி.மு.க., அமைப்பு செயலர் ஆர்.எஸ்.பாரதி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மூன்று மனுக்கள் தாக்கல் செய்துள்ளார். அதில், மாநில அரசுகளிடம் இருந்து ஆலோசனைகளை பெறாமல், பழைய சட்டங்களில் உள்ள சில பிரிவுகளை மாற்றம் செய்து, சட்டங்கள் சமஸ்கிருதம் ஆக்கப்பட்டுள்ளது. பல தரப்பினருக்கு, இது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. மூன்று சட்டங்களும் சமஸ்கிருத பெயரை கொண்டிருப்பது, மொழியியல் கூட்டாட்சி முறைக்கு எதிரானது. சட்ட பிரிவுகளை உள்ளார்ந்து பார்க்கும்போது, தெளிவற்ற முறையில் உள்ளதாக கூறப்பட்டுள்ளன.இந்த மனுக்கள், நீதிபதிகள் சுந்தர், செந்தில்குமார் அமர்வில், நேற்று விசாரணைக்கு வந்தன. அப்போது மனுதாரர் சார்பில் ஆஜராகிய மூத்த வழக்கறிஞர் இளங்கோ, ''ஆங்கிலத்தில் மட்டுமே சட்டங்கள் இயற்றப்பட வேண்டும் என கூறப்பட்டிருக்கும் நிலையில், சமஸ்கிருதத்தில் சட்டங்களை நிறைவேற்றியது, அரசியலமைப்புக்கு விரோதமானது,'' என்றார்.அப்போது, மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் சுந்தரேசன் ஆஜராகி, பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் கோரினார்.அதனையேற்ற நீதிபதிகள், மனுக்களுக்கு நான்கு வாரங்களில் பதிலளிக்க, மத்திய அரசுக்கு உத்தரவிட்டு, ஏற்கனவே தாக்கல் செய்த வழக்குகளுடன் சேர்த்து பட்டியலிட உத்தரவிட்டனர்.