பம்மல், ''உடல் பருமன் குறைப்பு சிகிச்சையில் வாலிபர் இறந்த சம்பவத்தில், பி.பி.ஜெயின் மருத்துவமனையில் அறுவை சிகிச்சைக்கு தேவையான அனைத்து வழிமுறைகளும் முறையாக பின்பற்றப்பட்டன.மருத்துவர்களோ, ஊழியர்களின் கவனக்குறைவோ எதுவும் நடக்கவில்லை,'' என்று, பி.பி.ஜெயின் மருத்துவமனையின் தலைமை நிர்வாக அதிகாரி விஜயலட்சுமி விளக்கம் அளித்துள்ளார்.இது குறித்து, அவர் கூறியதாவது:பம்மல் அண்ணா சாலையில், 1984ல், 'சங்கரா ஹெல்த் சென்டர்' என்ற பெயரில் துவங்கப்பட்ட 'மருத்துவமனை, 2001ல், பி.பி. ஜெயின் மருத்துவமனையாக மாற்றப்பட்டது. குறைந்த கட்டணத்தில், அனைத்து தரப்பு நோயாளிகளுக்கும் சேவை செய்து வருகிறது. 'தமிழ்நாடு கிளினிக்கல் எஷ்டாபிலிஸ்ட் மென்ட்' சட்டத்தை பின்பற்றி மருத்துவமனை இயங்குகிறது. என்.ஏ.பி.எச்., தரச்சான்றிதழும் பெற்றுள்ளது.புதுச்சேரியை சேர்ந்த ஹேமச்சந்திரன் என்ற வாலிபர், உடல் பருமன் குறைப்பு அறுவை சிகிச்சை தொடர்பாக, டாக்டர் பெருங்கோவை தொடர்பு கொண்டு உள்ளார்.டாக்டர் பெருங்கோ, குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையிலும், பி.பி. ஜெயின் மருத்துவமனையிலும் பணிபுரிந்து வருகிறார்.உடல் பருமன் குறைப்பு அறுவை சிகிச்சை செய்துகொள்ள முடிவு செய்த ஹேமச்சந்திரன், குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையை அணுகியுள்ளார்.அங்கு அதிக செலவு ஏற்படும் என கருதி, ஹேமச்சந்திரனின் தந்தை ஏப்., 12ல், ஜெயின் மருத்துவமனைக்கு வந்து, இங்குள்ள வசதிகளை பார்த்தார். பின், ஏப்., 21ல் ஹேமச்சந்திரனை இம்மருத்துவமனையில் சேர்த்தனர். அவருக்கு, நீரிழிவு மற்றும் ஹார்மோன் பிரச்னைகள் இருந்ததால், அனைத்து விதமான பரிசோதனைகளும் செய்யப்பட்டன.ஏப்., 22ம் தேதி, அறுவை சிகிச்சை அரங்கிற்கு அழைத்து செல்லப்பட்டார். மயக்க மருந்து கொடுத்து, சிகிச்சை துவங்கிய, 5 நிமிடங்களில், ஹேமச்சந்திரனுக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது.உடனடியாக சிகிச்சையை நிறுத்திய டாக்டர் பெருங்கோ மற்றும் குழுவினர், உயிர்காக்கும் நடவடிக்கைகளை எடுத்து, தேவையான மருந்துகளை கொடுத்து, உயிரை காப்பாற்றினர். பின், வெளியே இருந்த அவரது பெற்றோரிடம் கூறினர். அவர்கள், குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து செல்ல முடிவு செய்து, அம்மருத்துவமனை ஆம்புலன்ஸ் வரவைத்து மாற்றினர். அடுத்த நாள், ஏப்., 23ம் தேதி இரவு, அவர் இறந்து விட்டதாக தகவல் தெரியவந்தது.ஹேமச்சந்திரனுக்கு பி.பி.ஜெயின் மருத்துவமனையில் அளிக்கப்பட்ட சிகிச்சையின் போது தேவையான அனைத்து வழிமுறைகளும் முறையாக பின்பற்றப்பட்டன. மருத்துவர்களோ, ஊழியர்களின் கவனக்குறைவோ எதுவும் நடக்கவில்லை. இவ்வாறு, அவர் கூறினார்.