அம்மனுக்கு உகந்த மாதம் ஆடி. இம்மாதத்தில், செல்லியம்மன், மாரியம்மன் உள்ளிட்ட கிராம தேவதைகளுக்கு பால்குடம் எடுத்து, பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்துவர்.இந்தாண்டு ஆடி முதல் வெள்ளியான நேற்று, சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள பல்வேறு அம்மன் கோவில்களில், ஏராளமான பெண்கள் பொங்கலிட்டு, வழிபாடு நடத்தினர். கோவில்களில் விசேஷ அம்மன் பாட்டுகள் ஓயாது ஒலித்தன.சென்னையின் முக்கிய கோவில்களான மயிலாப்பூர் முண்டகக்கண்ணியம்மன், கோலவிழியம்மன், திருவேற்காடு கருமாரியம்மன், மாங்காடு காமாட்சி அம்மன், திருமுல்லைவாயில் பச்சையம்மன், பிராட்வே காளிகாம்பாள், மடிப்பாக்கம் பொன்னியம்மன் உள்ளிட்ட பல கோவில்களில் அம்மனுக்கு பால் அபிஷேகம் செய்தனர்.புற்றுக்கு பால் வார்த்தல், கூழ் வார்த்தல், மாவிளக்கு ஏற்றுதல், பொங்கலிட்டு குலவை போடுதல் உள்ளிட்ட நேர்த்திக்கடனை, பக்தர்கள் நிறைவேற்றினர். சில இடங்களில், தீ சட்டி ஏந்தி, அலகு குத்தி நேர்த்திக்கடன் நிறைவேற்றினர். எந்த பிரச்னை வந்தாலும் போற்றாத நாளில்லை தாயே உன்னை என, மனமுருகி வேண்டினர்.காஞ்சிபுரம் மாவட்டத்தில் கச்சபேஸ்வரர் கோவிலில் சுமங்கலி மற்றும் கன்னி பெண்கள் நாக சிலைகளுக்கு பூஜை செய்து வழிபட்டனர்.செங்கல்பட்டு மாவட்டத்தில் மாமல்லபுரம் துலுக்காணத்தம்மன், செம்பாக்கம் அழகாம்பிகை அம்மன் உள்ளிட்ட பல கோவில்களிலும், ஆடி மாத முதல் வெள்ளி விமரிசையாக கொண்டாப்பட்டது.
அதிகாலை முதல் பவானியம்மனை தரிசித்த பக்தர்கள்
பெரியபாளையம் பவானியம்மன் கோவில், பிரசித்தி பெற்றது. பழமை வாய்ந்த இக்கோவிலில் நடக்கும் விழாக்களில், ஆடி மாத விழா சிறப்பு வாய்ந்தது.முதல் ஞாயிற்றுக்கிழமை துவங்கி, 14 வாரங்கள் தமிழகம், ஆந்திரா ஆகிய மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் சனிக்கிழமை சென்று தங்கி, ஞாயிற்றுக்கிழமை பொங்கல் வைப்பர். ஆடு, கோழி பலியிட்டு, வேப்ப இலை ஆடை அணிந்து, பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்துவர்.ஆடி முதல் வெள்ளியை முன்னிட்டு, இந்தாண்டு விசேஷ நிகழ்ச்சிகள் துவங்கியுள்ளன. ஊத்துக்கோட்டை, பாலவாக்கம், ஆரணி, கும்மிடிப்பூண்டி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து பக்தர்கள், விடியற்காலை முதல் பாதயாத்திரையாக பெரியபாளையம் பவானியம்மன் கோவிலுக்கு சென்று அம்மனை தரிசனம் செய்தனர். மாவட்டத்தின் மற்ற கோவில்களிலும் ஆடி வெள்ளி விமரிசையாக நடந்தது.
ஆன்மிக பயணம் துவக்கம்
தமிழகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற அம்மன் கோவில்களுக்கு, ஆன்மிக சுற்றுப்பயணத்தை, ஹிந்து சமய அறநிலையத் துறை செயல்படுத்துகிறது.அதன்படி, கட்டணமில்லா ஆன்மிகப் பயணத்தில் பங்கேற்ற, 52 மூத்த குடிமக்கள் பயணத்தை, மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் முன், அமைச்சர் சேகர்பாபு கொடியசைத்து துவக்கி வைத்தார். மொத்தம் நான்கு வாகனங்களில், பக்தர்கள் பயணத்தை துவக்கி உள்ளனர்.பின், நிருபர்களிடம் அமைச்சர் கூறியதாவது:ஆடி மாத அம்மன் கோவில்களுக்கான முதற்கட்ட ஆன்மிகப் பயணத்தில், தமிழகம் முழுதும், 250 மூத்த குடிமக்கள் பயன்பெறுகின்றனர்.வரும் புரட்டாசி மாதத்தில் வைணவ கோவில்களுக்கு, 1,000 மூத்த குடிமக்கள் அழைத்து செல்லப்பட உள்ளனர். இதற்காக, 50 லட்சம் ரூபாயை அரசு மானியமாக ஒதுக்கியுள்ளது.அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டில் முருகப் பெருமானின் சிறப்பு பாடல் ஒன்று, '3D' எனும் முப்பரிமாண தொழில்நுட்பத்தில் பார்க்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.