| ADDED : ஏப் 29, 2024 01:26 AM
சென்னை:நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில், வெப்பம் தொடர்பான நோய்கள் பாதித்தவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை ஏற்பாடுகள் குறித்து, மாநகராட்சி கமிஷனர் ராதாகிருஷ்ணன் நேற்று ஆய்வு செய்தார்.பின், ராதாகிருஷ்ணன் கூறியதாவது:கோடை வெப்பத்தை எதிர்கொள்ள மாநகராட்சி சார்பில், 188 இடங்களில் குடிநீர் பந்தல் அமைக்கப்பட்டு உள்ளது. சென்னையில் உள்ள 140 நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள், 140 நகர்ப்புற நலவாழ்வு மையங்கள், 16 நகர்ப்புற சமுதாய நல மையங்கள், மூன்று மகப்பேறு மருத்துவமனைகளில், 24 மணி நேரம் ஓ.ஆர்.எஸ்., கரைசல் வழங்கப்படும்.பொது இடங்களில் சுகாதார பணியாளர்கள் வாயிலாக, 29ம் தேதி 75 இடங்களில் ஓ.ஆர்.எஸ்., கரைசல் வழங்கப்படும். வியர்வை அதிகம் வெளியேறும் போது உப்புச்சத்து, நீர்ச்சத்து பற்றாக்குறை ஏற்படும். இதனால் அதிக தாகம், தலைவலி, உடல் சோர்வு, தலைசுற்றல், தசைப்பிடிப்பு, மயக்கம் அறிகுறிகள் ஏற்படலாம். வெப்பத்தால் உடல் பாதிப்பு அதிகரித்தால், உடனே மருத்துவரை அணுக வேண்டும். வெயில் தாக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆஸ்பிரின், பாராசிட்டமால் மாத்திரை கொடுக்கக்கூடாது.இவ்வாறு அவர் கூறினார்.